பெண்களுக்கு பொருத்தமான துறை என நீங்கள் கருதும் துறைகள் பற்றிய தகவல்களைத் தரலாமா? | Kalvimalar - News

பெண்களுக்கு பொருத்தமான துறை என நீங்கள் கருதும் துறைகள் பற்றிய தகவல்களைத் தரலாமா? ஜூலை 27,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் வேலை தேடும் பெண்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் கேரளாவும் 2ம் இடத்தில் நமது தமிழகமும் 3ம் இடத்தில் மேற்கு வங்கமும் உள்ளன. பணி புரியச் செல்லும் பெண்களின் பணிப் பாதையை தேர்ந்தெடுக்கும் முன் சில அம்சங்களில் கட்டாயம் கவனம் செலுத்தப்பட வேண்டும். தனி நபரின் திறமை மற்றும் கற்கும் திறன், குடும்பத்தின் நிதி நிலைமை, மேற்படிப்பு களுக்கான வாய்ப்புகள், படிக்கும் பாடத்தின் கால அளவு, பாலினம் தொடர்புடைய அம்சங்கள்,  படிக்கும் கல்வி நிறுவனத்திற்கும் அவர்களின் வீடுகளுக்குமிடையே உள்ள தூரம், படித்தவுடன் வேலை கிடைப்பதற்கான உத்திரவாதம் போன்ற அம்சங்களை தீர ஆராய்ந்து அதன் பின்னரே துறையை தேர்வு செய்து படிக்க வேண்டியுள்ளது.

எனவே பெண்கள் குறிப்பிட்ட பணிகளுக்காக தங்களைத் தயார் செய்து படிக்கும் காலத்தி லேயே மேலே கூறப்பட்ட அம்சங்கள் பற்றிய தெளிவும் உறுதியும் பெறுவது எதிர்காலத்தில் அவர்களின் பணிப்பாதையை தெளிவாக்கும். பெண்களுக்கான சிறப்புத் துறைகள் என வேலை வாய்ப்பு ஆலோசகர்கள் கூறும் துறைகள் இவை தான்...

அனிமேஷன், மல்டிமீடியா
நல்ல கற்பனைத் திறமும் கலைத் திறனும் கம்ப்யூட்டர் வழிக் கல்வியில் ஆர்வமும் கொண்ட பெண்கள் இந்தப் படிப்பைத் தேர்வு செய்து மேற் கொள்ளலாம். குறுகிய காலத்தில் முடிக்கக்கூடிய படிப்பு இது. பிளஸ் 2 முடித்த எவரும் இதைப் படிக்கலாம்.

ஒரு செய்தியைச் சொல்வதில் தலையாய பங்கு வகிக்கும் அனி மேஷன் துறையானது எழுத்து, கிராபிக்ஸ், புகைப்படம், அனிமேஷன், வீடியோ, ஒலி மற்றும் இன்டர் ஆக்டிவிடி ஆகிய உத்திகளை ஒருங்கிணைத்து செயல்படுகிறது. இதைப் படிக்கும் பெண்கள் வீடியோ புரடக்ஷன், பப்ளிஷிங், பேஷன் டிசைனிங், டெக்ஸ்டைல் டிசைனிங், இன்டீரியர் டிசைனிங், புலன் விசாரணை போன்ற துறைகளில் பணி புரியலாம். மேலும் பெரிய இணைய தளங்களிலுள்ள சிடி ரைட்டிங், கிராபிக் டிசைன், வெப் டிசைன் போன்ற பணிகளிலும் பகுதி நேரமாகக் கூட ஈடுபடலாம்.

ஆர்க்கிடெக்சர்
தொழில்நுட்பமும் கலைத் தன்மையும் இணைந்து தேவைப்படும் துறை இது. கற்பனை வளம், அழகுணர்ச்சி மற்றும் துல்லியமான அளவுகள் ஆகிய அம்சங்களை கவனத்தில் கொள்ளும் துறை இது. +2 முடித்த பின் ஆர்க்கிடெக்சர் துறையை பொறியியல் பட்டப்படிப்பாக படிக்க வேண்டும். இது 5 ஆண்டு கால அளவைக் கொண்டது.

பயோடெக்னாலஜி
உயிரியல் அமைப்புகள், நுண்ணுயிரிகள் போன்றவை பற்றிய கோட்பாடுகளை ஆய்வு செய்து தொழில் நுட்ப ரீதியாக புதிய பொருட்களை உருவாக்குவது, பொருட்களை மாற்றுவது என இதன் பணிகள் உள்ளன. எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி. துறைகளை விட இன்று அதிக வீச்சுடன் முன்னேறி வருவது இத் துறை தான். இன்று இதில் பட்டப்படிப்பு, பட்டமேற் படிப்பு, ஆய்வுப் படிப்பு என பல்வேறு படிப்புகளை எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் தருகின்றன. இந்தியாவில் இத் துறையின் தலைசிறந்த நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவர் ஒரு பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

பயோஇன்பர்மேடிக்ஸ்
பயோடெக்னாலஜி மற்றும் ஐ.டி. ஒருங்கிணைப்பில் உருவான துறை இது. உயிரியல் பூர்வமான தகவல்களை கணிணி மூலமாக நிர்வகிக்கும் வகையை இது செய்கிறது. இதை இன்சிலிகோ பயாலஜி என்றும் கூறுகிறார்கள். ஐ.டி. திறன், உயிரியலில் ஆர்வம், கணிதத் திறன் பெற்றவருக்கு இது பொருத்தமான துறை.

சிவில் சர்வீசஸ்
சமூகத்திற்குத் தேவையான அடிப்படைப் பணிகளை நிறைவேற்றும் வாய்ப்பைத் தருவது இத் துறை தான். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுபவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளில் அமரலாம். இதிலும் அதிக எண்ணிக்கையில் பெண்கள் போட்டியிட்டு நுழைகிறார்கள்.

ராணுவப் பணிகள்
முன்பெலாம் ராணுவப் பணிகளில் பெண்கள் என்றால் அது நர்சாகவும் மருத்துவராகவும் தான் இருந்து வந்தது. ஆனால் ராணுவத்தின் பல்வேறு பிரிவு பணிகளிலும் இன்று பெண்கள் பணிபுரிகிறார்கள். குறுகிய கால அதிகாரிகள், டெக்னிகல் பணிகள் என எத்தனையோ விதமான பணிகளிலும் பெண்கள் சேரலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us