நான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். எங்களது கல்லூரியில் சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடிய விருப்பதால் இத் தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணி புரிய முடியுமா? வேறு என்ன செய்யலாம்? தயவு செய்து ஆலோசனை தரவும்.ஜூன் 21,2010,00:00 IST
தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளின் பொதுவான தரம் என்ன என்பதை உங்களது கடிதம் தெளிவாகக் காட்டுகிறது. சட்டப் படிப்பிலும் திறனில்லாமல் வழக்கறிஞராகப் போகிறோம் என்பதால் வேறு எந்தத் திறனையும் பெறாமல் பெரும்பாலான தமிழ்நாட்டு சட்டக் கல்வி மாணவர்களின் தரம் கவலை தருவதாகவே இருக்கிறது. நால்ஸார் எனப்படும் தேசிய சட்டக் கல்லூரிகளில் படித்து வெளியே வருபவர்கள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றச் செல்கிறார்கள்.
வேறு பலரோ லீகல் அவுட் சோர்சிங் போன்ற நவீன சட்டப் பணிப் பிரிவுகளுக்குச் சென்று தங்களது சட்டத் திறனைக் கொண்டு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். நம் மாநிலத்தின் பெரும்பாலான சட்ட மாணவர்களோ அடிப்படை தகவல் தொடர்புத் திறனிலேயே கடுமையாக பின்தங்கியிருப்பதுடன் சட்டத் திறனும் இல்லாமல் 5 ஆண்டுகளை வீணாகச் செலவழித்து விட்டு வருகின்றனர்.
பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ., மட்டுமன்றி இன்று பி.இ., பி.டெக்., முடிப்பவர்கள் கூட நிர்வாகப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை எழுதி பிற மாணவர்களுக்கு கடுமையான போட்டியைத் தருகிறார்கள். ஆனால் சட்டக் கல்லூரி மாணவர்களில் வெகு சிலர் மட்டுமே நல்ல சீனியர் வழக்கறிஞர்களிடம் சேர்ந்து அதிலும் ஒரு சிலர் மட்டுமே திறமையான வழக்கறிஞராக உருவாகிறார்கள். போட்டித் தேர்வுகள் எழுதி வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள், தமிழக அரசுத் துறைகள் ஆகியவற்றில் பணிக்குச் செல்லும் பி.எல்., மாணவர்கள் வெகு சிலரே. எனவே உடனடியாக உங்களது அடிப்படைப் பொது அறிவு, பகுத்தாராயும் திறன், கணிதத் திறன், ஆங்கிலத் திறன், தகவல் தொடர்புத் திறன் ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ள உதவும் சிறப்புப் பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து படிக்கத் தொடங்குங்கள்.
மேலும் உங்களது சட்டத் திறனையும் ஒரு சிறு குழுவாக உங்களது நண்பர்களை சேர்த்துக் கொண்டு வளர்க்க முயற்சியுங்கள். இல்லாத போது பொதுவாக பிற சட்டப் பட்டதாரிகள் போலவே நீங்களும் நிச்சயமில்லாத ஒரு எதிர்காலத்தை மட்டுமே பெற முடியும் என்பதை உணருங்கள்.
கடந்த வாரம் வெளியான உங்களது துறை சார்ந்த அறிவிப்பு ஒன்றை படித்திருப்பீர்கள் என நம்புகிறோம். அகில இந்திய அளவில் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வு மூலமாக மட்டுமே இனி ஒருவர் வழக்கறிஞராக முடியும் என்பதால் வெறும் படிப்போடு நின்றுவிடாமல் உங்களது துறை சார்ந்த திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.