அமெரிக்காவில் நர்சாக பணி புரிய தேர்வு செய்யப்படுவோருக்குக் கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு சுமார் 15 முதல் 18 லட்ச ரூபாய் தரப்படுகிறதாம். இதை விட முக்கியமானது என்ன தெரியுமா? நமது ஐ. டி., வல்லுனர்கள் அமெரிக்காவில் கிரீன்கார்ட் எனப்படும் நிரந்தர குடியுரிமை பெற 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்பட்டுள்ள தேர்வுகளில் வெற்றி பெற்று பிற தகுதிகளையும் பெற்றுள்ள நர்சுகளுக்கு கிரீன்கார்ட் கொடுத்தே உள்ளே அனுமதிக்கின்றனர்.
தற்போது அமெரிக்காவில் பணி புரியும் உள்ளூர் மற்றும் பிற நாட்டு நர்சுகளின் சராசரி வயது 46. அடுத்த 10 ஆண்டுகளில் இதில் கணிசமானோர் பணியிலிருந்து ஓய்வு பெறப்போகின்றனர். அமெரிக்காவிலுள்ள இளைஞிகள் பலருக்கும் நர்சாக பணி புரிவதில் விருப்பம் இல்லையாம். காரணம் இந்தப் பணிக்குத் தேவைப்படும் கடுமையான உழைப்பும் ஈடுபாடும் தான். எனவே இவர்கள் பிற பணி வாய்ப்புத் துறைகளைப் பற்றிய சிந்தனையில் ஈடுபட்டுள்ளனர். நர்ஸ் பணியில் சேர பலரையும் ஊக்குவிக்க அமெரிக்கா பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் பலனில்லை.
இதைப் படிப்பவருக்கு சிறப்பாக ஸ்காலர்ஷிப்கள் தரப்படுகின்றன. ஆனால் நர்சிங் கல்வி மையங்கள் வெறும் அறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே தான் கிரீன்கார்டைக் காட்டி வெளிநாட்டுத் திறனை உள்ளே கொணர அமெரிக்கா கடுமையாக தற்போது முயற்சித்து வருகிறது.
கால் சென்டர் துறை போலவே இதிலும் நமக்குக் கடும் போட்டியைத் தருவோர் பிலிப்பைன்ஸ் நாட்டவர் தான். மேலும் பிரிட்டன், அயர்லாந்து ஆகிய நாடுகளும் தரமான நர்சுகளை அமெரிக்காவுக்கு அனுப்பத் தயாராக உள்ளன. ஆனால் நமது பெண்களையே அமெரிக்காவின் பல ஆஸ்பத்திரிகளும் விரும்புகின்றன. காரணம் நமது ஆங்கிலத் திறன் தான்.