பொறியியல் படிப்பு - பெற்றோர்கள் நினைப்பது என்ன? | Kalvimalar - News

பொறியியல் படிப்பு - பெற்றோர்கள் நினைப்பது என்ன?

எழுத்தின் அளவு :

பொறியியல் கவுன்சிலிங் காலத்தில், மாணவர்களைவிட, அதிக பதற்றத்திலும், குழப்பத்திலும் இருப்பவர்கள் பெற்றோர்களே. ஏனெனில், பணத்தை செலவழிப்பது, பிள்ளைகளின் எதிர்காலத்தில் அக்கறை போன்றவற்றால் இந்த நெருக்கடி ஏற்படுகிறது.

நாடு முழுவதும், ஏராளமான அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே, இவற்றில், தங்கள் குழந்தைகளுக்கு பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு பெரிய சிக்கலாக தெரிகிறது. ஏனெனில், கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் தவறு செய்தால், பிற்காலத்தில் நல்ல பணிவாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சினையாகிவிடும் என்ற பயம் அவர்களை வாட்டுகிறது.

விழிப்புணர்வு இல்லாமை

பல பெற்றோர்களுக்கு, எது நல்ல பொறியியல் கல்லூரி, எது நல்லதல்ல என்ற தெளிவு இருப்பதில்லை. தங்கள் ஊரில் அல்லது போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும் ஏதேனும் ஒரு அருகாமை பொறியியல் கல்லூரி, தங்களின் உறவினர் பிள்ளை படிக்கும் கல்வி நிறுவனம் அல்லது வேறு யாரேனும் சிபாரிசு செய்த கல்வி நிறுவனம் என்ற அளவில், அவர்கள் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்ய நினைக்கிறார்கள்.

மேலும் பல பெற்றோர்களுக்கு, பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க, இணையதளங்களை ஒரு முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்துகின்றனர். பல பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகள் பிரபல பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக எழுதியிருக்கும் நுழைவுத்தேர்வுகளின் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள்.

தேர்வில், தங்களின் பிள்ளைகள் ஒருவேளை தோல்வியடைந்து விட்டால், பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் குழப்பமடைகிறார்கள்.

கோச்சிங் மையங்களை நம்புதல்

தங்களின் பிள்ளை கோச்சிங் மையத்தில் சேர்ந்துவிட்டால், இனிமேல் கவலையில்லை, அவ்வளவுதான், எல்லாம் முடிந்தது என்ற பல பெற்றோர்கள் நினைத்து விடுகிறார்கள். கோச்சிங் மையம், தங்களின் பிள்ளை, சிறந்த பொறியியல் கல்லூரியில் இடம்பெறுவதற்கான முழு உத்தரவாதத்தை அளித்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த எண்ணம் தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

வேலைவாய்ப்பு எங்கே அதிகம்?

பொதுவாக, பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கான பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது, அதில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்படி என்பதற்கே முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். படிக்கும் அனைவருமே பணி வாய்ப்பை பெறுகிறார்களா, பெரிய நிறுவனங்களில் எத்தனை பேர் பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள், அவர்களின் சம்பளம் எப்படி? என்பன போன்ற விஷயங்களிலேயே அவர்களின் முதல் கவனம் செல்கிறது என்று சர்வேக்கள் கூறுகின்றன.

உள்கட்டமைப்பு வசதிகள்

கல்லூரியில் வகுப்பறை எப்படி உள்ளது? குளிர்சாதன வசதி உள்ளதா, ஆய்வகங்கள் சிறப்பான வசதிகளைப் பெற்றுள்ளனவா, விடுதி வசதிகள் சிறப்பானவையா, அங்கே பரிமாறப்படும் உணவுகள் ருசியாகவும், தரமாகவும் உள்ளதா என்பன போன்ற விஷயங்களுக்கு பெற்றோர் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

எனவே, சில பெற்றோர்கள், இதுபோன்ற வசதிகள் அரசு கல்லூரிகளைவிட, தனியார் கல்லூரிகளிலேயே சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

செலவு எவ்வளவு?

பல பெற்றோர்கள், படிப்பு செலவு எவ்வளவு ஆகும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தன் பிள்ளைக்கு நல்ல பொறியியல் கல்லூரி கிடைத்துவிட்டால் போதும், கல்விக்கடன் பெற்றோ அல்லது வேறு ஏதேனும் வகையில் சமாளித்தோ படிக்கவைத்து விடுவேன், செலவைப் பற்றி கவலையில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

சிலரோ, என் பிள்ளைக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைத்தால் மட்டுமே படிக்க வைப்பேன். மற்றபடி, தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்க்கும் எண்ணம் இலலை என்றும் சிலர் கூறுகின்றனர்.

வேறு வாய்ப்புகள்

சில பெற்றோர்கள், பெயருக்காக தங்கள் பிள்ளைகளை பொறியியல் கல்லூரிகளில் சேர்த்துவிட வேண்டும் என்று விரும்புவதில்லை. நல்ல கல்லூரி கிடைத்தால் சேர்க்கலாம். இல்லையெனில், கலை - அறிவியல் கல்லூரிகள் அல்லது வேறு படிப்புகளை நாடிச் செல்லலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

பொறியியல்தான் சேர வேண்டும் என்ற பிள்ளைகளின் பிடிவாதத்திற்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை. பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், காலம், பணம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us