மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - பெண்களுக்கும் ஏற்ற துறையே!... | Kalvimalar - News

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - பெண்களுக்கும் ஏற்ற துறையே!...

எழுத்தின் அளவு :

ஒரு மாணவியிடமோ அல்லது அவரின் பெற்றோரிடமோ சென்று, நீங்கள் ஏன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யவில்லை என்று கேட்டால், கனமான இயந்திரத்தை கையாள முடியாது என்றே பதில் வரும். தற்போதைய நிலையில் பார்த்தால், இ.சி.இ., மற்றும் சி.எஸ்.இ., படிப்புகளோடு ஒப்பிடுகையில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் மாணவிகள் சேர்வது மிகவும் குறைவே.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மட்டுமல்ல, எந்தவொரு இன்ஜினியரிங் படிப்பை எடுத்துக்கொண்டாலும், முதல் செமஸ்டரின்போது, கார்பென்டரி, வீல்டிங் மற்றும் ஷீட் மெட்டல் ஆபரேஷன் உள்ளிட்ட விஷயங்களில் பயிற்சி செய்ய வேண்டும் என்பதை மறக்க கூடாது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களும் இதை செய்வார்கள்.

ஆனால், அதற்கடுத்த காலகட்டங்களில், இப்பிரிவு மாணவர்கள், CNC, CAD, CAM, Mechatronics, Dynamics, Metrology போன்ற மென்பொருள் சம்பந்தமான மெக்கானிக்கல் ஆய்வகங்களில் பணியாற்ற வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை, மெக்கானிக்கல் பிரிவை குறைந்த மாணவிகளே தேர்வு செய்வதால், குறைந்தளவிலான போட்டியும், அதிகளவிலான வேலை வாய்ப்புகளும் குவிந்துள்ளன என்பதை மறத்தல் கூடாது.

அனைத்து துறைகளிலும் மெக்கானிக்கல் இன்ஜினியரின் தேவை உள்ளது. வேலை வாய்ப்புகள் மிகவும் பரவலானவை. டிசைனிங், அனலிசிஸ், உற்பத்தி செயல்பாட்டை ப்ரோகிராம் செய்தல் மற்றும் நிர்வகித்தல், தரக்கட்டுப்பாடு, சப்ளை செயின் மேனேஜ்மென்ட், குவாலிடி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஆப்டிமைசேஷன் டெக்னிக்ஸ், வொர்க் ஸ்டடி மற்றும் மெதட் ஸ்டடி, உற்பத்தி மற்றும் திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறான பிரிவுகளில், மெக்கானிக்கல் படித்த பெண்கள் பணியாற்றுகிறார்கள்.

மேற்கூறிய பணிகள் அனைத்தும், ஒரு தொலைதூர இடத்திலிருந்து, Computational Fluid Dynamics, Ansys, FEA போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் ஸ்பெஷலைசேஷன் செய்த நபர்கள் மட்டுமே தேவைப்படுகிறார்கள்.

வாகன வடிவமைப்புத் துறையிலும், பெண்களுக்கான பணி வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. ஒரு வலுவான கணிப்பின் அடிப்படையில் பார்த்தால், நம் நாட்டில், அடுத்த 5 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பெரும்பாலான பெண்கள், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட், பிளான்ட் மெயின்டனன்ஸ் போன்ற பணிகளில் ERP நிபுணர்களாகவும், விற்பனை மற்றும் விநியோகத்தில் செயல்பாட்டு அனலிஸ்டாகவும், R&D -ல், வர்த்தக அனலிஸ்ட் மற்றும் ஆராய்ச்சியாளர்களாகவும் பணியமர்த்தப்படுகிறார்கள்.

மேலும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பெண்கள், ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன், மெக்கட்ரானிக்ஸ், மெரைன் இன்ஜினியரிங் மற்றும் ஏரோநாடிகல் இன்ஜினியரிங் போன்ற துறைகளில், ஸ்பெஷலைசேஷன் முறையில் உயர்படிப்புகளை மேற்கொள்ள முடியும். மேற்கூறிய பிரிவுகள் அனைத்திலும், பெண்கள் கோட்டாவில், சில அரசு பணிகளும் வழங்கப்படுகின்றன.

எனவே, பெருமளவிலான வாய்ப்புகளைக் கொண்டிருப்பதால், மெக்கானிக்கல் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க, பெண்கள் தயங்க வேண்டியதில்லை. இத்துறையில், பெண்களுக்கு, அரசின் ஆதரவும் கிடைக்கிறது.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us