ஏன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்? | Kalvimalar - News

ஏன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்?

எழுத்தின் அளவு :

நீங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை நன்கு கவனித்தாலோ அல்லது, அவர்கள் ஏன் விளையாட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைப் பற்றிய அறிக்கைகளைப் படித்தாலோ, உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரியவரும். மகிழ்ச்சியான நடவடிக்கை என்பதுதான் அது. விளையாட்டு என்பது ஒரு புதிய உலகத்தை, குழந்தைகளுக்கு உருவாக்கித் தருகிறது. எனவே, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் விளையாடவும், உடலியக்க நடவடிக்கைகளில் ஈடுபடவும் உற்சாகப்படுத்த வேண்டும்.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே முன்மாதிரி

பெற்றோர்கள்தான், குழந்தைகளின் முதல் முன்மாதிரிகள். அவர்களின் குணநலன்களையே மாதிரிகளாக எடுத்துக்கொண்டு, குழந்தைகள் பின்பற்ற தொடங்குகின்றன. உங்களின் கோபம், குரோதம், எதிர்மறை விஷயங்கள், கோழைத்தனம், தன்னம்பிக்கையின்மை உள்ளிட்ட எதிர்மறை எண்ணங்கள், உங்கள் குழந்தையின் மனதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, குழந்தைகளின் முன்பாக உங்களின் பலவீனங்களை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது. அமைதியுடனும், சுயகட்டுப்பாடுடனும் நடந்துகொள்ளுங்கள்.

நேர்மறையாகவே பேசுங்கள்

தங்களது பெற்றோர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை, எப்போதுமே, குழந்தைகள் ஆர்வத்துடன் கவனிப்பார்கள். எனவே, நமது பேச்சில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். நாம் நேர்மறை எண்ணங்களை, குழந்தைகளின் முன்பாக வெளிப்படுத்த வேண்டும். தம்மைப் பற்றி மற்றவர்கள், குறிப்பாக பெற்றோர்கள் என்ன கருத்துக்களை(மதிப்பீட்டை) சொல்கிறார்கள் என்பதை வைத்தே, அவர்களின் ஆளுமை வடிவம் பெறுகிறது. எனவே, நேர்மறை விஷயங்களை அதிகம் கேட்கையில், நேர்மறை ஆளுமையை வளர்த்துக்கொள்கிறார்கள்.

முதலில் நாம் ஒரு மனிதர்

ஒரு மனிதர் அரசியல்வாதியாக இருக்கலாம், விஞ்ஞானியாக இருக்கலாம், விளையாட்டு வீரராக இருக்கலாம் அல்லது நடிகராக இருக்கலாம். இது, ஒரு மனிதரின் தொழில்முறை சார்ந்த அடையாளமாகவோ அல்லது பொழுதுபோக்கு சார்ந்த அடையாளமாகவோ இருக்கலாம். ஆனால், இத்தகைய அடையாளங்களையும் மீறி, ஒருவருக்கு மனிதர் என்ற அடையாளமே நிரந்தரமானது மற்றும் முக்கியமானது.

எனவே, உங்களின் குழந்தை, தான் ஒரு மனிதன் என்ற சுயபிம்பத்தை கற்றுக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். அதன் திறமை மற்றும் சாதனைகள் மற்றும் தோல்விகள் மற்றும் தவறுகள் போன்றவை, மனிதன் என்ற பிம்பத்தை அழித்துவிடக்கூடாது. இந்த விஷயத்தில், பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

உங்களின் வாழ்க்கை உங்கள் குழந்தைக்கானதல்ல...

உங்களின் குழந்தைக்கென தனி விருப்பங்கள் மற்றும் ஆசாபாசங்கள் உண்டு. நீங்கள் விரும்புவதையே உங்களின் குழந்தை விரும்பும் என்று எதிர்பார்த்தல் தவறு. அது உங்களின் பிள்ளையாக இருக்கலாம். ஆனால், அதற்கென்று தனி குணாதிசயங்கள் உண்டு. எனவே, உங்களின் லட்சியங்கள் மற்றும் கனவுகளை, உங்கள் குழந்தைகளின் மீது திணிக்கக்கூடாது. இது மாபெரும் தவறு.

சிரிப்பே பெரிய வரம்!

பிற விலங்குகளிடம் இல்லாத, அதேசமயம் மனிதனுக்கு மட்டுமே இருக்கும் ஒரு மிகப்பெரிய அதிசயம் நகைச்சுவை உணர்வு. எனவே, உங்கள் குழந்தை, நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்வதை உறுதிசெய்வதும் பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்று. தன் வயதொத்த பிள்ளைகளிடம் சிரித்து விளையாடி மகிழ்வது, குழந்தைகளின் மனவளர்ச்சிக்கு தேவையான ஒன்று. இன்றைய நமது கல்விமுறை, குழந்தைகளின் சந்தோஷ வாழ்வையே அளிப்பதாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

அடையக்கூடிய இலக்கு!

சிறுவயதில், குழந்தைகள் தாங்கள் பார்த்ததை, கேட்டதை மற்றும் படித்ததை வைத்து இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளும். சில குழந்தைகள் காலப்போக்கில் அதை மறந்துவிட்டாலும், சில குழந்தைகள் அதையே கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். மேலும், வளர்ந்து பெரியவர்களான மாணவர்களுக்கே, தாங்கள் என்னவாகப் போகிறோம் என்பதைப் பற்றி தெளிவாக இலக்கு நிர்ணயித்துக்கொள்ள முடிவதில்லை.

பலர், தங்களை சுற்றியுள்ள சமூக சூழலுக்கு ஆட்பட்டு விடுகின்றனர். எனவே, ஒவ்வொரு பெற்றோரும், குடும்ப சூழல், குழந்தையின் ஆர்வம், திறன் மற்றும் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில், சிறப்பான மற்றும் பொருத்தமான ஒரு இலக்கை நிர்ணயிப்பதில் உதவ வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us