வங்கித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்றிருக்கிறேன். ஆனால் எனது குடும்பச் சூழலால் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறேன். என்னால் போட்டித் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியுமா? | Kalvimalar - News

வங்கித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்றிருக்கிறேன். ஆனால் எனது குடும்பச் சூழலால் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறேன். என்னால் போட்டித் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியுமா? மார்ச் 08,2010,00:00 IST

எழுத்தின் அளவு :


நல்ல வேலை கிடைக்கும் வரை தனியார் துறையில் கிடைக்கும் சுமாரான வேலைகளில் ஒன்றில் சேர்ந்தால் நல்ல வேலைக்காக உழைக்க முடியுமா என்பது பலரது மனதில் உள்ள கேள்வி. படிப்பு முடித்து சில மாதங்களோ ஆண்டுகளோ வீட்டில் இருந்தால் எந்த கட்டாயமும் இல்லாமலே ஒரு
வேலையில் சேர்ந்தால் தான் நமக்கு நல்லது என்ற நினைப்பில் சில இளைஞர்கள் உயிரை எடுக்கும் வேலைகளில் போய் சேர்ந்து மாட்டிக் கொள்கிறார்கள்.

சம்பளம் கொடுப்பவர் என்ன சமூக சேவையாகவா வேலையை கொடுப்பார்? குறைவான சம்பளத்தில் முடிந்த மட்டுக்கும் நன்றாக வேலையை வாங்கி விட வேண்டும் என்பதே எந்த நிர்வாகிக்குமான தன்மை. பட்டப்படிப்பு முடித்த பின் 2000க்கும் 2500க்குமான சம்பளத்தில் பணியில் சேர்ந்து விட்டு, பின்பு எந்த போட்டித் தேர்வுக்கும் தயார் செய்ய முடியாமல் அல்லது மேற்கொண்டு திறன்களை வளர்த்துக் கொள்ள முடியாமல் தவிப்பவர் நிறையப் பேர் உள்ளனர். இவர்களுக்காகத் தான் இந்தத் தகவல்.

8 மணி நேரத்திற்குக் குறைவாக தற்போது வங்கிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலுமே யாரும் வெளியே வர முடிவதில்லை. எங்கும் கம்ப்யூட்டர் மயமானபின்பு வேலை குறைவதற்குப் பதிலாக கூடிக் கொண்டே தான் போகிறது. காரணம் புதிதாக இவற்றில் பணியிடங்களே உருவாவதில்லை. மேலும் ஏற்கனவே காலியான இடங்களும் நிரப்பப்படுவதில்லை.

எனவே தனியார் துறை என்று மட்டுமல்லாமல் பொதுத் துறை நிறுவனங்களிலும் அரசுத் துறையிலுமே தற்போது கடுமையான பணித் தேவை இருக்கிறது. இது இந்த கால கட்டத்தின் கட்டாயம். எனவே பணியில் சேர்ந்த பின்பு கொஞ்சம் அனுமதி வாங்கிக் கொண்டு இதைப் படிக்கலாம் அதில் சேரலாம் என எண்ணக் கூடாது. மாறாக, உங்களது நேரத்தை மிகச் சிறப்பாக நிர்வகிக்கும் திறனைப் பெற நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
உங்களது தகுதிக்கும் அடிப்படைத் திறனுக்குமான பணி வாய்ப்புகள் என்னென்ன, இதற்கு எப்படி தயாராக வேண்டும், என்னென்ன படிக்க வேண்டும், எப்போது படிக்க முடியும், கூடுதலாக எதில் பயிற்சி தேவை, யாருடன் சேர்ந்து இவற்றில் திறன் பெற முடியும் போன்ற எண்ணற்ற கேள்விகளை உங்களுக்கு நீங்களாகவே எழுப்பிக் கொண்டு, ஒவ்வொன்றுக்குமான அணுகுமுறையை நண்பரோடு அல்லது உங்களுக்கு உதவக் கூடியவரோடு விவாதித்து முடிவு செய்து கொண்டு அதற்கேற்ப உங்களது முயற்சியை தொடங்குங்கள்.

இவற்றில் சுணக்கம் ஏற்பட்டால் எந்த நிறுவனத்தில் பணிபுரிய தற்போது எரிச்சல் வருகிறதோ அதிலேயே கடைசி வரைக்கும் கால் காசுக்கும் அரை காசுக்கும் வாழ்நாள் முழுவதும் பணிபுரிய வேண்டி வரலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள். இவை எதுவுமே முடியாத போது அதே நிறுவனத்தில் மேலே மேலே செல்ல என்னென்ன தகுதிகளும் திறன்களும் தேவை என்பதை அறிந்து அவற்றைப் பெற முயலுங்கள். வாய்ப்புகள் எங்கும் உள்ளன. எது நமது எதிர்காலத்திற்கு உதவும் என்பதே உங்களுக்கான சரியான தேடலாக இருக்க வேண்டும்.

 

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us