மதுரையில் எத்தனை கல்லூரிகள் உள்ளன? இவற்றிலிருந்து எத்தனை பேர் இந்த நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடிகிறது? | Kalvimalar - News

மதுரையில் எத்தனை கல்லூரிகள் உள்ளன? இவற்றிலிருந்து எத்தனை பேர் இந்த நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடிகிறது?பிப்ரவரி 11,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

நகரிலும் மதுரையைச் சுற்றியுள்ள புற நகர்ப் பகுதிகளிலும் உள்ள கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆரோக்கியமான ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளாக இருந்தாலும் கூட இவற்றிலும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்கள் அப்படியே வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். இவர்களை சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள ஐ.டி., பன்னாட்டு நிறுவனங்கள் பணிக்கு எடுத்துக் கொள்கின்றன.

ஆனால் படிப்பை முடிப்பவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இவர்கள் சென்னை, திருச்சி, கோயம்பத்தூர் போன்ற நகரங்களைச் சேர்ந்த மாணவர்களோடு போட்டி போட வேண்டியுள்ளது. சென்னையோடு ஒப்பிடுகையில் இந்த பிற நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் தகவல் தொடர்புத் திறனில் பின் தங்கியுள்ளனர். டோபல், ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற பன்னாட்டு ஆங்கிலத் திறனறியும் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் இந்த நகரங்களில் அதிகமாக தோன்றிய பின்பும் இதே நிலைதான் நீடிக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளில் ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., பாங்கிங் மற்றும் பிற நிதிச் சேவைகள், ஓட்டல் மற்றும் சுற்றுலா, டெலிகாம், எண்ணெய் எரிவாயு, பயோடெக், ஹெல்த் கேர், அனிமேசன் மற்றும் விளையாட்டுகளுக்கான சாப்ட்வேர் ஆகியவற்றில் ஏராளமான வேலைகள் உருவாகவுள்ளன. தற்போது இறுதியாண்டு அறிவியல் பிரிவு படிப்பவருக்கும் கலைப் பிரிவு மற்றும் காமர்ஸ் படிப்பவருக்கும் இவற்றில் வேலை உண்டு. ஆனால் இதற்காக நீங்கள் கொஞ்சம் திட்டமிடலும் அதற்கேற்ப உங்களது திறன்களை வளர்ப்பதும் முக்கியம்.

பட்டப்படிப்பு படிப்பவர் கூடுதலாக திறன்களைப் பெற கட்டாயம் தேவை முதலாமாண்டிலிருந்தே கம்ப்யூட்டர் திறன்கள். பி.ஏ., படிப்பவராக இருந்தாலும் பி.காம்., படிப்பவராக இருந்தாலும் டேலி போன்ற அக்கவுண்டிங் சாப்ட்வேர்களில் திறன் தேவை. இது போன்ற அக்கவுண்டிங் பேக்கேஜ்களோடு என்டர்பிரைஸ் ரிசோர்ஸ் பிளானிங் எனப்படும் நவீன அலுவலக சாப்ட்வேர் தொகுப்பை அறிவதும் மிக அடிப்படை அவசியமாகும். கணக்கு நமக்கு வராது என்பதால் தானே கலைப் பிரிவு எடுத்தோம் என்றெலாம் தயங்க வேண்டாம். கம்ப்யூட்டரில் இது போன்ற பிரிவுகளைப் படிப்பதற்கு அடிப்படைக் கணிதத் திறன் பெற்றால் போதும். பயம் தேவையில்லை.

அறிவியல் பிரிவு பட்டப்படிப்பு படிப்பவருக்கு சி, சி++ போன்ற மொழிகளில் திறன் தேவை. படிக்கும் கம்ப்யூட்டர் கல்வி நிறுவனத்தில் ஏற்கனவே படித்தவரை விசாரித்த பின்பே சேர வேண்டும். பெரும்பாலான கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் முதலில் சிறப்பாக நடத்தத் தொடங்கி பின்பு பாதை மாறி மாணவர்களுக்கு பயனில்லாமல் போகின்றன.

எந்தப் பிரிவு படிப்பவராக இருந்தாலும் அடிப்படையில் தப்பு இல்லாத ஆங்கில மொழித் திறன் கட்டாயம் தேவை. பேசும் திறன், இலக்கணம், வார்த்தை பயன்பாடு, எழுதும் திறன் ஆகியவற்றைக் பட்டப்படிப்பு முடிக்கும் போதாவது பெற்றிருப்பது அறிவுறுத்தப்படுகிறது. அடிப்படை ஆப்டிடியூட் டெஸ்டுகளில் பரிச்சயம் பெற்று திறன் பெறுவதும் அவசியமாகும். சில தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் இங்கே கூறப்பட்டுள்ள
வற்றை ஏற்கனவே தங்களது பாடத்திட்டத்திலேயே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஆங்கில பத்திரிகை வாசிப்பது, செய்திகளைப் பார்ப்பது, கேட்பது, ஆங்கிலத்தில் பேச முயற்சிப்பது ஆகியவையும் அவசியமாகும். இவற்றை இரண்டு மாதங்களிலோ 3 மாதங்களிலோ பெற முடியாது.

பொது அறிவு என்பது எல்லோரிடமும் பொதுவாக எதிர்பார்க்கப்படும் அறிவு என்பதால் உங்களைச் சுற்றி நடப்பதையும் நடந்ததையும் தெரிந்து கொள்வது முக்கியம். எனவே வரலாறு, புவியியல், அறிவியல் என்று இவற்றில் அடிப்படை விஷயங்களை எப்போதும் நீங்கள் தெந்து வைத்திருக்க வேண்டும்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பது பொது அறிவைப் பொறுத்த வரை மிகவும் பொருந்தக் கூடிய பழமொழி. விளையாட்டாக பொது அறிவை கற்றுக் கொண்டிருக்கும் உங்கள் நண்பரைப் பாருங்கள். எந்த சிறப்பு முயற்சியும் இல்லாமல் பரந்த விஷய ஞானம் பெற்றவராக அவரை நீங்களே உணர்ந்திருப்பீர்கள். எனவே இங்கே குறிப்பிட்டுள்ளவற்றை கட்டுரையாக நினைக்காமல் இப்போதிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக பெற முயற்சியுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us