சாப்ட்வேர் துறை வாய்ப்புகள் பற்றி விரிவாகக் கூறவும். | Kalvimalar - News

சாப்ட்வேர் துறை வாய்ப்புகள் பற்றி விரிவாகக் கூறவும். டிசம்பர் 29,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

வேகமாக வளரும் இன்றைய பொருளாதாரத்தில் புதுவிதமான வேலை வாய்ப்புகள் தினமும் உருவாகி வருகின்றன. ஐ.டி., இன்ஜினியரிங் போன்ற படிப்புகளுக்கான கிராக்கி அதிமாக இருந்தாலும் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம். போன்ற படிப்புகளிலும் எண்ணற்ற நபர்கள் சேர்ந்து படிப்பதைக் காண்கிறோம்.

மாநகரங்களில் இருக்கும் மாணவர்கள் படிக்கும் போதே சிறப்பான மேற்படிப்புகளுக்கான தேர்வுகளான காமன் அட்மிசன் டெஸ்ட், ஜி.ஆர்.ஈ., டோபல் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொண்டு கூடுதலாக முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

மாணவர்களுக்கு இன்று எத்தனையோ விதமான வாய்ப்புகள் இருக்கின்றன. பட்டப்படிப்புகளைப் படிக்கும் போதே சாப்ட்வேர் திறன் பெறுவதன் முக்கியத்துவத்தையும் பலனையும் இன்று பல மாணவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் பல இந்தியாவில் தொடங்கப்படுவதால், அவற்றின் தேவையின் தன்மையும் மாறியிருக்கிறது.

எனவே இன்றைய வேலை வாய்ப்புத் துறைகளின் சாப்ட்வேர் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப தயாரானால் இன்னமும் கூட எளிதாக நல்ல வாய்ப்புகளைப் பெற முடியும் அல்லவா?

சாப்ட்வேர் எனப்படும் கம்ப்யூட்டர் மென் பொருள் துறையானது புரொகிராம்கள், ஆப்பரேடிங் சிஸ்டம், அப்ளிகேசன் சாப்ட்வேர், வேர்ட் புராசஸர் போன்ற அடிப்படைப் பணிகளோடு தொடர்புடையது.இவற்றின் பயன்பாடு துறைக்கேற்ப மாறுவதோடு, வளர்ச்சியும் எல்லையின்றி விரிந்து வருகிறது.

இன்று நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். சேவை, ஆன்லைன் பாங்கிங், ஆன்லைன் டிக்கட் புக்கிங், ஆன்லைன் படிப்புகள், ஆன்லைன் வர்த்தகம் போன்ற பல நவீன சேவைகளும் இத் துறை முயற்சிகளின் அபரிமிதமான பலன்களே.

சாப்ட்வேர் துறை வேலைகள் டெவலப்மென்ட்(உருவாக்குதல்):

சாப்ட்வேர் நுட்பங்களை பயன்படுத்தி புதிய தொழில்களையும் தொழில்களுக்கான மாடல்களையும் உருவாக்குவதை டெவலப்மென்ட் என்னும் வார்த்தை குறிக்கிறது. ஸாப், ஆரக்கிள் போன்ற சாப்ட்வேர் தேவையை அறிந்து, அதற்கு தகுந்த மாதிரியான தொழில்நுட்பங்களை உபயோகித்து, தேவைக்கேற்ப சாப்ட்வேர் புரொகிராம்களை உருவாக்குவது இவ்வகையின் அடிப்படை அம்சமாகும்.

இப் பணிகளில் தொழில்நுட்ப அறிவு சார்ந்தவர்களும், பணி புரிந்து நடைமுறைத் திறன் பெற்றவரும் இணைந்து புராஜக்டுகளை மேற்கொள்கிறார்கள். இப் பணிகளைச் செய்ய தொழில் நுட்பத்திறன் பெற விழைபவர்களும் புதிய சாப்ட்வேர் மாதிரிகளை உருவாக்க விரும்புபவர்களும் பொருத்தமானவர்கள்.

மெயின்டனன்ஸ்

ஏற்கனவே நடைமுறையில் இருக்கக் கூடிய சாப்ட்வேர் புரொகிராம்களில் தேவைப்படும் மாற்றங்களை உருவாக்குவது, தவறுகளைத் திருத்துவது, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, புதியவற்றை சேர்ப்பது போன்ற பணிகளை இது குறிக்கிறது. இப் பிரிவில் பணி புரிய வாடிக்கையாளர்களின் தொழில் தன்மையையும் தேவைகளையும் பற்றிய ஆழமான அறிவு தேவை. பகுத்தாய்வுத் திறன் கொண்ட புரொகிராமர்கள் இப் பிரிவிற்குப் பொருத்தமானவர்கள்.

இப் பிரிவில் பிராப்ளம் சால்விங்கில் ஆர்வம் கொண்டவரும் பணி புரியவிருக்கும் பிரிவில் (Domain Knowledge) ஈடுபாடு கொண்டவரும் பணி புரியலாம்.

சப்போர்ட்

செயல்பட்டு வரும் சாப்ட்வேர் புரொகிராம் களில் அவ்வப்போது தேவைக்கேற்ப மாற்றம் செய்வது, பிரச்னைகளை உடனடியாக களைவது போன்ற பணிகள் இந்தப் பிரிவில் மேற் கொள்ளப்படுகின்றன. ஒரு பிரச்னையைப் பற்றிக் கேட்டவுடன் எவ்வளவு விரைவில் முழுமையாக அதைத் தீர்க்கிறோம் என்பதில் தான் இத் துறையின் வெற்றி உள்ளது. எனவே இங்கு பணி புரிய வேகம், விவேகம் இரண்டுமே அவசியம்.

டெஸ்டிங்

புதிதாக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் புரொகிராம்கள் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்வதாக இருக்கிறதா என சோதித்துப் பார்த்தல் இப் பிரிவின் தலையாய பணியாகும். வாடிக்கையாளரின் தேவைகளை மனதில் முழுமையாக புரிந்து வைத்திருப்பதோடு டெவலப்பர்களின் அறிவையும் தாண்டி இங்கு சிந்திக்க வேண்டியிருக்கிறது. புதிய சிந்தனைகளின் மூலமாக புது மாற்றங்களையும் உருவாக்கும் வாய்ப்பு இதில் அதிகம். இது சோதனைப் பிரிவு வேலை என்பதால் மிகவும் கவனமாக கையாள வேண்டிய பணியாக இது இருக்கிறது.

சாப்ட்வேர் பணிகளை இது போல அடிப்படையான 4 பிரிவுகளாகப் பிரித்தாலும் அனைத்து நிறுவனங்களும் இதே மாதிரியைத் தான் பின்பற்ற வேண்டும் என அவசியமில்லை. சாப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள் இப் பிரிவுகளில் முதல் சில ஆண்டுகள் மாறி மாறி பணி புரிகிறார்கள்.

- சாப்ட்வேர் டெவலப்மென்டில் மட்டும் ஆர்வம் கொண்டவருக்கு டெக்னிகல் ஆர்க்கிடெக்ட், டிசைனர், டெக்னிகல் லீடர், சீப் டெக்னாலஜி ஆபிசர் போன்ற பணிகள் உள்ளன. இதில் சிறப்பாக செயல்பட அடிப்படையிலேயே பல துறை பற்றிய ஆர்வம், டொமைன் திறன் ஆகியவை அவசியமாகும். தவிர பல்வேறு துறைகளிலும் சர்டிபிகேட் படிப்புகளைப் படிப்பதும் பலன் தரும். கம்ப்யூட்டர் பிரிவில் எம்.எஸ். முடித்தவர்கள் இந்த பிரிவு பணிகளுக்குப் பொருத்தமானவர்களாக இருப்பர். திறமைக்கேற்ப சம்பாதிக்கும் வாய்ப்பும் அதிகம்.

- பிசினஸ் அப்ளிகேஷன் பிரிவில் ஈடுபாடு உடையவர் டொமைன் ஸ்பெசலிஸ்ட், எக்ஸ்பர்ட், கன்சல்டன்ட் போன்ற பணிகளுக்குப் பொருத்தமாக இருப்பர். டொமைன் பற்றிய திறன் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு டொமைனில் அவருக்கு இருக்கும் திறனின் அடிப்படையிலேயே சம்பளம் தரப்படும். இத் துறையில் நுழைந்து 10 ஆண்டுகளுக்குப் பின் பதவி உயர்வு பெற விரும்பினால் எம்.பி.ஏ. போன்ற தகுதிகளைக் கூடுதலாகப் பெற வேண்டும்.

- சாப்ட்வேர் மற்றும் பிசினஸ் அப்ளிகேஷன் இரண்டையும் ஒரு சேர இணைத்து பணி புரிய விரும்புபவர்களுக்கு புராஜக்ட் லீடர், மேனேஜர், டிவிசன் மேனேஜர் போன்ற பணிகள் பொருத்தமாக இருக்கும். இப் பிரிவில் பணி புரிய நிறுவனங்களே தேவையான பயிற்சியைத் தருகின்றன.

எல்லாத் திறமைகளும் இருந்தாலும் தகவல் தொடர்புத் திறன் இல்லாதவர்களால்இதில் சிறப்பாக செயல்பட முடியாது. சாப்ட்வேர் துறைக்குச் செல்ல விரும்புபவர்கள் தொடக்கம் முதலே கவனம் செலுத்த வேண்டியதும் இதில் தான்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us