சிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2 படித்து முடிக்கவுள்ளேன். இத் துறையின் பணி வாய்ப்புகள் குறித்துக் கூறலாமா? | Kalvimalar - News

சிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2 படித்து முடிக்கவுள்ளேன். இத் துறையின் பணி வாய்ப்புகள் குறித்துக் கூறலாமா? டிசம்பர் 22,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக சிவில் இன்ஜினியர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் இவற்றைக் கூறலாம்.

* திட்டமிடல், வடிவமைத்தல், மேற்பார்வையிடல் மற்றும் கட்டு
மானப் பணிகள்
* கட்டுமான இடங்களை ஆய்வு செய்வது
* திட்டத்தின் சாத்தியம் குறித்து ஆய்வு செய்து அறிவது
* கட்டுமான செலவு குறித்த அறிக்கை தயாரித்து கட்டுமானப் பணிகளுக்கான கால வரையறைகளை தயாரிப்பது
* கட்டடம் அமையவுள்ள பகுதியிலுள்ள அரசு அதிகாரிகளிடமிருந்து கட்டிட மாதிரிக்கான ஒப்புதலைப் பெறுவது
* வாடிக்கையாளர்கள், ஆர்க்கிடெக்டுகள், அரசாங்க அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், பணியாளர்களுடன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைப்பை உருவாக்கி பணியை மேற்கொள்வது
* கட்டுமான இடத்தில் அவ்வப்போது எழும் பிரச்னனகளை களைவது
திறமையான சிவில் இன்ஜினியராக மாற என்ன குணநலன்கள் தேவை?:
* நல்ல ஆக்க சக்தி மற்றும் ஊக்க சக்தி
* கட்டுமானம் தொடர்புடைய எந்த விஷயத்திலும் ஆழ்ந்த அறிவு
* நல்ல கணிதத் திறன்
* பலருடன் சுமூகமாக கலந்துரையாடும் பண்பு மற்றும் அனைத்துத் தரப்பு ஊழியர்களுடன் எளிதில் பழகும் தன்மை
* ஒரு குழுவில் முக்கிய அங்கத்தினராகப் பணியாற்றும் பண்பு
* மழை, வெயில், பனி போன்ற மாறுபட்ட தட்ப வெப்ப நிலைச் சூழல்களில் எந்த இடத்திலும் பணியாற்ற விருப்பம்
* பிரச்னைகளை அடையாளம் கண்டு, ஆராய்ந்து களையக் கூடிய திறன்
வளர்ந்து வரும் இந்தியாவின் பொருளாதாரத்தின் காரணமாக நகரங்களிலும் சிறு நகரங்களிலும் கட்டுமானப் பணிகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழிற்சாலைகள் தோன்றிவருவதுடன், நெடுஞ்சாலைகள், வேகமான போக்குவரத்து வசதிகள், அண்டர்கிரவுண்ட் மெட்ரோ ரயில்கள், பறக்கும் ரயில்கள், சாலைகள், பாலங்கள் போன்றவை அதிகரிக்கப்படுகின்றன.


எனவே சிவில் இன்ஜினியர்களுக்கான தேவை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிவில் இன்ஜினியர்களுக்கு இது வளர்ச்சி வாய்ப்புகள் உச்சத்தில் இருக்கக் கூடிய கால கட்டமாக விளங்குகிறது. தேவைக்கேற்ற எண்ணிக்கையில் சிவில் இன்ஜினியர்கள் இல்லை என்பதால் அவர்களுக்கு பெரும் கிராக்கி இருக்கிறது. உலகமெங்குமே சிவில் இன்ஜினியர்களுக்கான கடுமையான தேவை இருப்பதால், வெளிநாட்டு வாய்ப்புகள் கூட இன்று மிக அதிகமாக இருக்கிறது.


சிவில் இன்ஜினியர்களுக்கு அரசு சார்ந்த பொதுப் பணித் துறை (பி.டபிள்யூ.டி,) நெடுஞ்சாலைத் துறையிலும், தனியார் நிறுவனங்களிலும், எல். அண்ட் டி., டி.எல்.எப்., ரெசிடென்சியல் பில்டர்ஸ், பி.எச்.இ.எல்., மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், ரயில்வே போன்ற நிறுவனங்களிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளது.


சிவில் இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்புகளை இன்ஜினியரிங் கல்லூரிகளிலும், டிப்ளமோக்களை பாலிடெக்னிக்குகளிலும் படிக்கலாம். இன்ஜினியரிங் துறையில் சேர விரும்புபவர்கள் பிளஸ்2ல் இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்கள் உள்ள பிரிவில் சேர வேண்டும். எல்லா இன்ஜினியரிங் கல்லூரிகளிலுமே சிவில் இன்ஜினியரிங்கில் இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.
ஒரே இடத்தில் அல்லது ஊரில் மட்டுமே நீண்ட நாட்களுக்கு வேலை பார்க்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இத் துறை உகந்ததல்ல.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us