இந்தியாவில் அகழ்வாராய்ச்சித் துறையின் நிலை எப்படி? | Kalvimalar - News

இந்தியாவில் அகழ்வாராய்ச்சித் துறையின் நிலை எப்படி?

எழுத்தின் அளவு :

ஆர்க்கியாலஜி(அகழ்வாராய்ச்சித் துறை) என்ற துறையின் பிரதான நோக்கம், கடந்த காலத்தைப் பற்றிய ஒரு விழிப்புணர்வையும், அறிவையும் மனிதர்களுக்கு அளிப்பதுதான்.

மனித இனத்தின் தோற்றம் ஆப்ரிக்காவில் தொடங்கியது என்பது போன்று, மனித இனத்தைப் பற்றி, பொதுவான நிலையில், பல சிறப்பான விஷயங்களை சொல்லக்கூடியது ஆர்க்கியாலஜி(அகழ்வாராய்ச்சித் துறை). நம்மிலிருந்து வேறுபட்ட சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆகியவற்றின் மீது ஒரு மரியாதை ஏற்படும்படி செய்கிறது ஆர்க்கியாலஜி.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஆர்க்கியாலஜி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொல்பொருள் ஆராய்ச்சியானது, நம் முன்னோர்களின் காலம் மற்றும் நாம் படித்த புத்தகங்களுக்கு வெளியே வாழ்ந்த மனிதர்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் ஒரு அற்புதமான துறை.

எழுதுதலும், பதிவுசெய்து வைத்துக்கொள்ளும் முறையும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், மனித வரலாற்றின் 99% வரலாறு, அறியப்படாமல் அழிந்தே போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அத்தகைய மறைந்துபோன விஷயங்களை, வெளியேக் கொணர்ந்து, நமது உலகம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றிய மிக அத்தியாவசியமான விழிப்புணர்வை தருகிறது ஆர்க்கியாலஜி.

இந்த துறை சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு காரணம், இத்துறையில் பணி செய்வதன் மூலம், பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து, அங்கே ஆய்வுகளை மேற்கொண்டு, கடந்த காலத்தில் அவ்விடங்களில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களின் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை எப்படி இருந்தது, அவர்களின் நாகரீக வளர்ச்சி எந்தளவில் இருந்தது உள்ளிட்ட அற்புதான விஷயங்களை அறிந்துகொள்ள முடியும்.

இத்துறைப் பணியானது, ஒரு வகையில் துப்பறியும் பணியை ஒத்ததாகும். ஏனெனில், துப்பறியும் பணியில், உண்மை மற்றும் காரண காரியங்களை கண்டறியும்போது கிடைக்கும் திரில் அனுபவம், இப்பணியிலும், உண்மைகளை கண்டறியும்போது கிடைக்கிறது.

இந்தியா போன்ற பழமையான நாடுகளில், அகழ்வாராய்ச்சி மூலமாக தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு. இந்தியாவில் இத்துறை, இன்றைய நிலையில் வளர்ந்துவரும் ஒன்றாகத்தான் இருக்கிறதே ஒழிய, வளர்ந்த ஒன்றாக இல்லை. இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், இத்துறையில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்கும் ஒரு பெரிய சவால் என்னவெனில், குறைந்தளவு வேலை வாய்ப்புகள்தான்.

ஆர்க்கியாலஜி துறை தொடர்பான படிப்பும், ஒரு தனி படிப்பாக, இந்தியாவில் இதுவரை வளர்ச்சியடையவில்லை. வேறு ஏதேனும் ஒரு துறை படிப்புடன் சேர்ந்த, ஒரு துணைப் படிப்பாகத்தான் இருக்கிறது. எனவே, ஒரு ஆர்வமுள்ள மாணவரால், இளநிலை ஆர்க்கியாலஜி என்று தனியாக ஒரு பட்டப் படிப்பை மேற்கொள்ள முடியவில்லை. சிவில் சர்வீஸ் தேர்விலும் ஆர்க்கியாலஜி தொடர்பான பேப்பர்கள் இல்லை.

எனவே, இத்துறையில் ஆர்வமுள்ள இந்திய மாணவர்கள், இத்துறை படிப்பை விரிவாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ள, வெளிநாட்டிற்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. அதன்மூலமாக, இத்துறையில் ஒரு நிபுணராக நுழையலாம்.

அதற்காக, இந்தியாவில் இத்துறை ஆய்வில் ஈடுபடும் நிபுணர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள் மற்றும் இத்துறை தொடர்பாக சிறப்பான ஆய்வுகள் போதுமான அளவில் இந்தியாவில் நடைபெறவில்லை என்பதாக அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. இத்துறை தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள, போதுமான பல்கலைகளோ மற்றும் கல்வி நிறுவனங்களோ இந்தியாவில் இல்லை என்பதே இதன் அர்த்தம்.

இத்துறையில், ஸ்பெஷலைசேஷன் என்று வரும்போது, அதிகளவிலான தாவரவியலாளர்களும், விலங்கியலாளர்களும் உடனடியாக தேவைப்படுகிறார்கள். இந்தியாவின் பண்டைய உணவுப் பழக்கங்கள் குறித்து பல விஷயங்கள் கண்டறியப்பட்டிருப்பதால், archaeobotany மற்றும் archaeozoology ஆகிய துறைகளில் ஸ்பெஷலைசிங் செய்வதற்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். இத்தகைய ஆய்வுகள், நமது மூதாதையர்களின் பலதரப்பட்ட வாழ்க்கை முறைகள் குறித்து அறிந்துகொள்ள உதவுகிறது.

இந்தியாவின் ஏராளமான கல்வி நிறுவனங்களில், தாவரவியலும், விலங்கியலும் கற்றுத் தரப்படுகின்றன. ஆனால், இந்தப் பாடங்களில் நிபுணத்துவம் பெறும் நபர்கள், துரதிருஷ்டவசமாக, ஆர்க்கியாலஜி துறையில் நுழைவதில்லை.

ஏனெனில், இத்துறையில் அவர்கள் நினைக்குமளவிற்கு, நல்ல சம்பளமுள்ள பணி வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதால்தான். அதிக நிபுணர்களை இத்துறையின்பால் ஈர்க்க, போதுமான நிதி தேவைப்படுகிறது. அதிக நபர்கள் இத்துறையில் நுழைவதன் மூலம், இந்தியாவின் பண்டைய ரகசியங்கள் குறித்து நிறைய கண்டுபிடிக்க முடியும்.

இந்தியாவின் பண்டைய கால சுரங்கங்கள் குறித்து, முதல் முக்கியத்துவம் தரப்பட வேண்டியுள்ளது. ஏனெனில், இந்நாட்டில் அதிகளவிலான பண்டைய சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அந்த இடங்களின் காலகட்டம் குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய அகழ்வாய்வுகள் மூலம், அப்பகுதியிலுள்ள தாதுக்கள் மற்றும் இதரப் பொருட்கள் குறித்த விபரங்களை அறியலாம்.

மீட்கொணர்வு அகழ்வாய்வு(Rescue or Salvage archaeology) என்ற ஒன்று இந்தியாவில் இல்லவே இல்லை. இந்த வகை அகழ்வாய்வை மேற்கொள்வதன் மூலம், ஒரு இடத்தில் ஒரு கட்டுமானம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, அந்த இடத்தின் தன்மை குறித்து நாம் ஆய்வுசெய்து, அதை பதிவுசெய்ய முடியும்.

உதாரணமாக, விமான நிலையங்களையோ, நெடுஞ்சாலைகளையோ, ரயில் நிலையங்களையோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களையோ ஏற்படுத்தும் முன்னதாக, சம்பந்தப்பட்ட இடங்களை சர்வே செய்து, அதன் பழைய தன்மைக் குறித்து பதிவு செய்துவிட வேண்டும். இதன்மூலம், ஒரு இடம் முற்றிலும் மாற்றம் செய்யப்படும் முன்னதாக, அது முன்பு எப்படி இருந்தது மற்றும் என்னவாக இருந்தது என்பதைப் பற்றிய பதிவை, வருங்கால தலைமுறைக்கு விட்டுச்செல்ல முடியும். இத்தகைய ஒரு நடைமுறை, உலகின் பல நாடுகளில் பின்பற்றப்பட்டாலும், இந்தியாவில் கிடையவே கிடையாது.

நல்ல நிதி வளம், அதிக ஆதரவு மற்றும் பல்வேறு கல்வி நிறுவன பாடங்கள் ஆகியவை, இந்தியாவில், ஆர்க்கியாலஜி, ஒரு பிரபலமான துறையாக உருமாறுவதற்கு அவசியம். ஆர்க்கியாலஜி துறையில் ஒருவர் படிப்பை மேற்கொள்ள விரும்பினால், அந்த மாணவர், வரலாறு தொடர்பாக அதிகம் படிப்பது அவசியம். ஏனெனில், இறந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறாமல், ஆர்க்கியாலஜி ஆய்வை மேற்கொள்ள முடியாது. எனவே, இத்துறையில் ஈடுபட, வரலாற்று அறிவு மிக மிக அவசியம்.

மேலும், அதிக பயணம் செய்தலில் ஆர்வம் மற்றும் வீட்டைவிட்டு அதிக நாட்கள் வெளியில் இருக்கக்கூடிய தன்மை கொண்ட நபர்களுக்கு, இத்துறை மிகவும் ஏற்றது.

இன்னொரு முக்கிய விஷயம் என்னவெனில், ஆர்க்கியாலஜி ஆய்வில் நீங்கள் எதை ஆய்வு செய்கிறீர்களோ, அதை தயவுசெய்து வெளியிடுங்கள். ஏனெனில், இந்தியாவைப் பொறுத்தவரை, ஏராளமான புதைபொருள் ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டிருப்பினும், அவை முறையாக publish செய்யப்படவில்லை. இதனால், அவைப் பற்றிய விபரங்கள், மற்றவர்களுக்குத் தெரியாமலேயே போய்விட்டது.

ஆர்க்கியாலஜி துறையில் சாதிப்பதற்கு தேவையான பண்புகள்

* வரலாற்றின் மேல் அளப்பரிய ஆர்வத்தைக் கொண்டிருப்பதோடு, கடந்த காலத்தின் மீதான காதலும் முக்கியம்.
* நீங்கள் அதிக பயணம் செய்வதற்கு மலைக்கக்கூடாது மற்றும் வீட்டை விட்டு அதிக நாட்கள் தங்கியிருப்பதற்கான மனோநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
* நீங்கள் எதை கண்டுபிடிக்கிறீர்களோ, அதை, கட்டாயம் வெளியிட வேண்டும். இதன் மூலம்தான், நீங்கள் கண்டறிந்த விஷயங்களை வெளியில் அறிவிக்க முடியும் என்பதோடு, உங்களுக்கான அங்கீகாரத்தையும் பெற முடியும்.
* ஆர்க்கியாலஜிஸ்ட் பணி என்பது ஒரு துப்பறியும் நிபுணரின் பணியைப் போன்றது. எனவே, அதற்கேற்ப உங்கள் மனதில் அதீத ஆராயும் தன்மையும், தொலைநோக்கும் இருக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us