டிராவல் கியூரேட்டர் | Kalvimalar - News

டிராவல் கியூரேட்டர்

எழுத்தின் அளவு :

இந்த உலகம் என்பது ஒரு புத்தகம் போன்றது. இந்த உலகில் பயணம் செய்யாத மக்கள், அதில் ஒரு பக்கத்தை மட்டுமே படித்தவர்கள் என்று கூறப்படுகிறது.

பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்வதன் மூலம், புதிய மனிதர்கள், புதிய புதிய இடங்கள் மற்றும் அதன் பண்பாட்டு முறைகள், மனிதர்கள் தவிர, இதர விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றை அறிந்து, ஒரு அசாத்திய அனுபவத்தைப் பெறலாம்.

சிறந்த அனுபவத்தை தரக்கூடிய வகையில், ஒருவரின் சுற்றுலாத் திட்டத்தை வடிவமைத்து தருவதே டிராவல் கியூரேட்டர் என்பவரின் பணியாகும்.

டிராவல் கியூரேட்டிங் என்றால் என்ன?

ஒரு வழக்கமான சுற்றுலா திட்டமிடுதல் என்று எடுத்துக்கொண்டால், டிராவல் ஏஜென்ட் என்பவர், விமானம் அல்லது ரயில் அல்லது பேருந்து ஆகியவற்றுக்கு டிக்கெட் ஏற்பாடு செய்வதிலிருந்து, தங்குமிட வசதிகள் வரை அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுப்பார்.

டிராவல் ஏஜென்ட்டுகள், சுற்றுலாவுக்காக, மேலோட்டமாக திட்டமிடும் வேளையில், இந்த கியூரேட்டர்கள், சுற்றுலாவை, சம்பந்தப்பட்ட நபர்களுக்கேற்ப, சிறந்த அனுபவத்தை தரும் ஒன்றாக மாற்றுகிறார்கள்.

பணி

டிராவல் கியூரேட்டர் என்பவர், சுற்றுலா செல்பவரின் எதிர்பார்ப்பு மற்றும் நிதி நிலைக்கேற்ப, அவர் எங்கே செல்லலாம் என்பதை சரியாக கணித்து, அதற்கேற்ப ஆலோசனை வழங்கும் ஒரு நிபுணர்.

நீங்கள், உங்களின் சுற்றுலா திட்டம் குறித்து, ஒரு டிராவல் கியூரேட்டரை அணுகும்போது, அவர், உங்களது சுற்றுலா திட்டத்தின் தன்மை மற்றும் நோக்கத்தை அறிந்து, அவரது அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், உங்களின் சுற்றுலாவை, ஒரு பயனுள்ள மற்றும் இன்பச் சுற்றுலாவாக மாற்ற முயல்கிறார்.

டிராவல் கியூரேட்டர் பணி என்பது, டிராவல் ஏஜென்ட் பணியைப் போலவே தெரிந்தாலும், கியூரேட்டர் பணி என்பது நுட்பமானது. ஒரு பயணியின் நிதி நிலையை மட்டுமே, டிராவல் ஏஜென்ட் கணக்கில் கொள்ளுவார். ஆனால், கியூரேட்டர், ஒரு பயணியின் ஆளுமை, அவரின் எதிர்பார்ப்பு, அவரின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை உள்வாங்கி, அதன் அடிப்படையில், பயணத்தை திட்டமிடுவார்.

திறன்கள்

விடுமுறை நாட்களில், உலகின் பல இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து வர வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இதுபோன்ற சுற்றுப் பயணங்கள், மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்தளவிற்கு நன்மை தரக்கூடியதாக இருக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.

ஒரு சுற்றுலாவை சிறப்பாக்க, ஒருவருக்கு, ஆர்வமும், பணமும் இருந்தால் மட்டும் போதாது. மாறாக, சமூகங்களைப் பற்றிய போதிய அறிவும், மக்களிடம் பழகும் திறனும் இருத்தல் வேண்டும்.

சுற்றுலா செல்லக்கூடிய இடம் எது என்பதை மிகச் சரியாக முடிவுசெய்ய வேண்டுமெனில், அந்த இடத்தின் பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களை அறிந்துகொள்வது அவசியம். இதனை அறிந்துகொள்வதற்கு, நேரம் ஒதுக்குவதும் தேவையாக உள்ளது. பல நேரங்களில், பல அறியப்படாத இடங்களைப் பற்றிய தகவல், அங்கே வாழும் பூர்வீக மக்களின் மூலமாகவே கிடைக்கிறது.

ஒரு டிராவல் கியூரேட்டர் என்பவர், தனது வாடிக்கையாளரின் தேவை மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றை பொறுமையாக கேட்டு, அதனை நிறைவேற்றுபவராக இருத்தல் வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு பயணி, சுற்றுலா குறித்து தனது கற்பனையில் கொண்டிருப்பதை, நிஜத்தில் கொண்டுவருபவராக டிராவல் கியூரேட்டர் செயல்பட வேண்டும்.

கியூரேட்டிங் செயல்பாடு

இதை ஒரு ஜாலியான பணி என்றே சொல்லலாம். ஆர்வம் மிகுந்த, அதேசமயத்தில் கடமையை கருத்தாக செய்ய வேண்டிய பணியுமாகும் இது. சுற்றுலா இடங்களையும், அதன் மக்களையும் பற்றி தெரிந்துகொள்ள, நாம் இணையத்தில் அதிகம் படிக்க வேண்டியிருக்கும்.

அதன்பிறகு, நீங்கள் படித்த விஷயங்கள் உண்மைதானா? என்பதை உறுதிசெய்து, உங்களது வாடிக்கையாளருக்கு, அவரது தேவைக்கேற்ப எந்த இடத்தைப் பரிந்துரைக்கலாம் என்பதை முடிவு செய்யலாம்.

சுற்றுலாவுக்கான திட்டம் தயாரித்தல், அதற்கு அப்ரூவல் பெறுதல், இறுதியாக டிக்கெட் புக் செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் அடக்கம்.

வாய்ப்புகள்

சுற்றுலா சென்று புதிய இடங்களை காண வேண்டுமென்ற ஆவல், ஏறக்குறைய உலகின் அனைத்து மனிதர்களுக்குமே உண்டு. ஆனால், ஒரு வெற்றிகரமான சுற்றுலா திட்டத்தை அமைத்துக்கொள்ளும் திறமை வெகு சிலரிடம் மட்டுமே உண்டு.

பல டிராவல் ஏஜென்சிகள் அமைத்துக் கொடுக்கும் பட்ஜெட்டுக்கு ஏற்ற சுற்றுலா திட்டங்கள் நன்றாக இருந்தாலும், சுற்றுலா செல்லும் நபர்கள், தங்களது பயணத்தின் மூலமாக, சிறந்த அனுபவத்தையும், அறிவையும் பெறுவதை அவைகளால் உறுதிசெய்ய முடியாது. இந்தக் குறையை டிராவல் கியூரேட்டர்கள் போக்குகின்றனர்.

எனவே, டிராவல் கியூரேட்டர்களை நாடும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெகுமதிகளும் சவால்களும்

டிராவல் கியூரேட்டர் பணி என்பது, இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் பிரபலமாகவில்லை. எனவே, இத்துறையில் நுழைந்த ஆரம்ப நாட்களிலேயே, ஒருவர் நிறைய வருமானத்தையும், பெரிய வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது.

இதில் மிகப்பெரிய சவால் என்னவென்றால், நாடிவரும் வெவ்வேறான வாடிக்கையாளர்களின், பலவிதமான எண்ணங்களைப் புரிந்துகொண்டு, அவர்களை திருப்திபடுத்துவதென்பது சாதாரணமானதல்ல.

சில வாடிக்கையாளர்கள், உண்மையான சேவையை புரிந்துகொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் சிலரோ, புரியாமலோ அல்லது வேண்டுமென்றோ, தகராறு செய்வோராக இருக்கலாம்.

ஒருவருக்கு உலகைச் சுற்றுவதில் பேரார்வம் இருப்பின், அவருக்கு டிராவல் கியூரேட்டிங் பணி என்பது மிகவும் பொருத்தமான ஒன்று.

சம்பளம்

நிறுவனத்திற்கு நிறுவனம், சம்பளம் வேறுபடும். டிராவல் கியூரேட்டர் பணியை ப்ரீலேன்ஸ் முறையிலும் மேற்கொள்ளலாம்.
பொதுவாக, ஆரம்ப நிலை சம்பளம், ரூ.15,000 என்பதிலிருந்து தொடங்குகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us