ஆடியோ விசுவல் மீடியா படிப்பு பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றியும் கூறவும். | Kalvimalar - News

ஆடியோ விசுவல் மீடியா படிப்பு பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.அக்டோபர் 04,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

திரைப்படம் தயாரிப்பது, இதழியல், குறிப்பிட்ட பிராண்ட் மேம்பாடு, மீடியா புரொமோஷன் மற்றும் திட்டமிடல், மீடியா படிப்புகள், போட்டோகிராபி போன்ற அனைத்து அம்சங்களையும் இணைத்தது தான் ஆடியோ வீடீயோ மீடியா படிப்புகள். நல்ல தகவல் தொடர்புத் திறனுடன்
கிரியேடிவிட்டியை இணைத்து கேமரா மூலமாகத் தரும் ஆர்வமுடையவருக்கு இது மிகவும் பொருத்தமான துறை. இதில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் தரப்படுகின்றன.

பிளஸ் 2 தகுதியுடையவர் பட்டப்படிப்பிலும் ஆடியோ விசுவல் தொடர்பான பட்டப்படிப்பு முடித்திருப்பவர் பட்ட மேற்படிப்பிலும் சேரலாம்.  திரைப்படத் தயாரிப்பு, திரைக்கதை எழுதுவது, எடிட்டிங், இதழியல், டாகுமெண்டரி தயாரிப்பு என ஆர்வத்தைத் தூண்டக்கூடிய சவாலான பிரிவுகள் உள்ளன. இதனால் தான் இதைப் படித்து முடிப்பவர்கள் பன்முகத் திறன்கள் கொண்டவராக மாறிவிடுகிறார்கள். இன்று நாம் காணும் உலகமயமாக்கல் மற்றும் அதன் விளைவான நுகர்வோர் கலாசாரம் ஆகியவற்றால் இத்துறைப் படிப்புகளுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இப்படிப்புகளில் தியரி மற்றும் பிராக்டிகல் பிரிவுகள் உள்ளன. இதில் பட்டப்படிப்பு முடிக்கும் ஒருவர் திரைப்படம் தயாரிப்பு, டிவி தொடர்கள் தயாரிப்பு, திரைக்கதை அமைப்பது உள்ளிட்ட கிரியேடிவான பல பணிப் பிரிவுகளில் ஈடுபடுகிறார்கள். ‘டிவி’ சானல், மீடியா நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், அனிமேஷன் ஸ்டுடியோ ஆகியவற்றில் ஏற்கனவே பணியாற்றுபவரோடு இணைந்து பணியாற்றத் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ளலாம். வெறும் படிப்பால் மட்டும் இவற்றின் நெளிவு சுளிவுகளை அறிய முடியாது. இப்போது இந்தியாவில் பல புகழ் பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி சேனல்கள், விளம்பர சேனல்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள் உள்ளன.

இவை தவிர அமைவிடத்தைப் பொறுத்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என திரைப்படத் துறையும் பெரிய தொழிலாக மாறியிருக்கிறது. இவற்றிலெல்லாம் நல்ல திறனும் ஊக்கமும் கொண்ட விசுவல் மீடியா திறனாளர்களுக்கு அபரிமிதமான தேவை இருப்பதைக் காண முடிகிறது. திறமை, பொறுமை, நம்பிக்கை மற்றும் புது பரிமாணத்தில் எண்ணங்கள் ஆகியவை இருப்பவர் இதில் புகழ் பெற்று விளங்குகிறார்கள். இத்துறையில் படிப்பை சிறப்பான திறன்களுடன் முடிப்பவர்கள் இந்தியா தவிர அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

புதிதாக இப்படிப்புகளை முடிப்பவருக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றாலும் அந்த நாட்டின் கலாசாரம், மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் போது சிறப்பான எதிர்காலத்தைப் பெற முடிகிறது. பி.பி.சி., ஸ்கை ‘டிவி’ போன்றவற்றில் ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு செய்தி வாசிப்பவர், செய்தி ஆய்வாளர், இதழியலாளர் என எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.

ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களான எம்.ஜி.எம்., சோனி பிக்சர்ஸ் போன்றவற்றில் மீடியா பிளானர், அசிஸ்டண்ட் டைரக்டர், புரடக்சன் இன்ஜினியர், எடிட்டர், திரைக்கதை எழுத்தாளர் போன்ற வாய்ப்புகள் கிடைக்கின்றன. பிலிம் மேக்கர், எடிட்டர் மற்றும் பிரீலான்ஸர் பணி வாய்ப்புகளும் உள்ளன. சென்னை அடையாறிலுள்ள பிலிம் அண்ட் ‘டிவி’ இன்ஸ்டிடியூட் ஆப் தமிழ்நாடு, இன்ஸ்டிடியூட் ஆப் பிலிம் டெக்னாலஜி, அடையாறு, சென்னை, புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆகிய நமக்கு அண்மையிலுள்ள கல்வி நிறுவனங்களில் இப்படிப்புகளைப் படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us