ஆஸ்திரேலிய கல்வி பற்றிய பயங்கள் ஒரு புறம் இருந்தாலும் ஏற்கனவே அங்கு படிக்கும் என்னுடைய உறவினர் சமீபத்திய நிகழ்வுகள் தற்செயல் நிகழ்வுகள் தானென்றும் ஆஸ்திரேலிய கல்வி சிறப்பானது என்றும் கூறுகிறார். ஆஸ்திரேலிய கல்வி சிறப்பானதுதானா? | Kalvimalar - News

ஆஸ்திரேலிய கல்வி பற்றிய பயங்கள் ஒரு புறம் இருந்தாலும் ஏற்கனவே அங்கு படிக்கும் என்னுடைய உறவினர் சமீபத்திய நிகழ்வுகள் தற்செயல் நிகழ்வுகள் தானென்றும் ஆஸ்திரேலிய கல்வி சிறப்பானது என்றும் கூறுகிறார். ஆஸ்திரேலிய கல்வி சிறப்பானதுதானா? செப்டம்பர் 13,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

சிறந்த தகுதி வாய்ந்த பன்னாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் ஆஸ்திரேலிய பல்கலைகழகங்கள் முன்னணியில் உள்ளன. உலக அளவில்ஆஸ்திரேலிய பல்கலைக்கழக படிப்புகளுக்கு உள்ள அங்கீகாரம், கலாசார மாறுபாடுகளை உள்ளடக்கிய பல்கலை துறைகள், ஆஸ்திரேலியாவின் சிறப்பான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஆஸ்திரேலியா சிறந்த படிப்புகளுக்கான சரணாலயமாக திகழ்கிறது. இதனால் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவற்றில் புதுமையான கல்வி முறைகள், திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த கல்வி வசதிகள் வழங்கப்படுவதால், இங்கு பயிலும் மாணவர்கள் எதிர்கால சமுதாய தேவைக்கேற்ற முக்கிய அங்கமாக உருவாகிறார்கள். இங்கு சிறப்பான கல்வி தரப்படவேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலிய அரசு அதிக மானியங்களையும் பிற உதவிகளையும் அதிக அளவில் தருகிறது. இதனால் ஆஸ்திரேலிய கல்வியானது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் கல்விச் செலவை விட குறைவாகவே இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மொத்தம் 39 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 37 பல்கலைக்கழகங்களுக்கு ஆஸ்திரேலிய அரசாலும் 2 பல்கலைக்கழகங்களுக்கு தனியாராலும் நிதியுதவி தரப்படுகிறது.

சராசரியாக இவை ஒவ்வொன்றிலும் 3000 முதல் 50000 மாணவர்கள் படிக்கிறார்கள். பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள், பிஎச்.டி., போன்ற படிப்புகள் தரப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட படிப்பைக் கூட இணைந்து ஒரே சமயத்தில் படிக்கும் வாய்ப்பும் உண்டு. ஆஸ்திரேலிய கல்வியின் சிறப்பம்சங்கள் என வெளிநாட்டு நிறுவனங்களோடு கூடிய இணைந்து செயலாற்றும் உடன்பாடு, ஆய்வு நெறி முறைகள் ஆகியவற்றைக் கூறலாம். ஆஸ்திரேலியாவில் 100க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இதனால் ஆய்வுத் துறைகளில் ஆஸ்திரேலியாவே முதன்மையாக விளங்குகிறது.

மரபியல், பயோடெக்னாலஜி, நானோடெக்னாலஜி மற்றும் விளையாட்டு தொடர்பான துறைகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. விளையாட்டை அறிவியல் நோக்கில் அணுகுவதால் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஆஸ்திரேலியா பல ஆண்டுகளாக உலக சாம்பியனாக திகழ்கிறது. மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா துறைகளில் புதுமையான பல படிப்புகளை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

சில முக்கிய படிப்புகளும் பல்கலைகழகங்களும்: சுற்றுச் சூழல் தொடர்பான படிப்புகள் சிலவற்றை ஆஸ்திரேலிய பல்கலைகழகங்கள் தருகின்றன. டாஸ்மேனியா பல்கலைகழகம் அண்டார்டிகா தொடர்பான ஆய்வுப் படிப்பைத் தருகிறது. மெக்கொயர் பல்கலைக்கழகம் புரதப் பொருள் ஆய்வு மூலமாக கேன்சர் நோயை கட்டுப்படுத்தும் முறைகளை தந்திருக்கிறது. பயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ், உயிரி மூலக் கூறுகளின் மரபியல் போன்ற படிப்புகள் இந்த பல்கலைகழகத்தால் தரப்படுகிறது.

தெற்கு குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தாவரங்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களை வணிக ரீதியில் பயன்படுத்துவது தொடர்பான சிறப்புப் படிப்பை தருகிறது. இது போன்ற படிப்பை தரும் பல்கலைகழகம் ஆஸ்திரேலியாவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகம் வான் கோளவியல் சார்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைப்பதில் சிறந்து விளங்குகிறது. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் மில்லி செகண்ட் பல்சர்களை உருவாக்க இப் பல்கலைகழகம் பெரும்பங்காற்றியிருக்கிறது.

விக்டோரியா தொழிற்கல்வி பல்கலைக்கழகம் தீ விபத்து மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல் துறை படிப்புகளைத் தருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் பரிந்துரைப்படி உலகெங்கும் தற்போது தீ விபத்துகளிலிருந்து தப்ப உதவும் கட்டிட மாடல்கள் உருவாக்கப்படுகின்றன. தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் இன்ஜினியர்கள் மற்றும் சயின்டிஸ்டுகளுக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பைத் தருகிறது. தொழில் ரீதியான நிர்வாகப் படிப்புகளைத் தரும் சிறந்த பல்கலைகழகங்களில் பெரும்பாலானவை ஆஸ்திரேலியாவில் தான் உள்ளன.

ஆஸ்திரேலியாவின் பிற முக்கிய பல்கலைக்கழகங்கள் இவை தான்.
ஆஸ்திரேலியன் கிராஜூவேட் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்
கிராஜூவேட் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்
மொனாஸ் மவுன்ட் எலிசா பிசினஸ் ஸ்கூல்
மெல்பர்ன் பிசினஸ் ஸ்கூல்
ஆஸ்திரேலியன் நேசனல் யுனிவர்சிடி
யுனிவர்சிடி ஆப் கான்பரா
யுனிவர்சிடி ஆப் டாஸ்மானியா
யுனிவர்சிடி ஆப் ஒலகாங்
யுனிவர்சிடி ஆப் குவின்ஸ்லாந்து

நகரங்களிலிருந்து தொலைவில் உள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வியைத் தருகின்றன. இ லெர்னிங் மற்றும் ஆன்லைன் படிப்புகளிலும் ஆஸ்திரேலிய பல்கலைகழகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இதனால் வெளிநாட்டு மாணவர்களும் சிறப்பான ஆன்லைன் கல்வியைப் பெற முடிகிறது. சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நமது கவலை நியாயமானது தான். எனினும் இது விரைவில் மாறிவிடும் என்றே நம்பலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us