எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் தான் நம்மைச் சுற்றிலும் உள்ளன. கம்ப்யூட்டர் படிக்காதவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு நமது அத்தனை துறைகளும் கம்ப்யூட்டர் மயமாகி விட்டது. எனவே சாதாரணமாக பட்டப்படிப்பு படிப்பவரிலிருந்து பள்ளிப் படிப்பு படிப்பவர் வரை பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் படிப்பை, கல்வி நிறுவனத்திலோ அல்லது கம்ப்யூட்டர் மையங்களிலோ படிக்க முனைகின்றனர்.
இப்படி படிக்க நினைப்பவருக்கு வரும் மிக முக்கியமான குழப்பம்- எந்த பாடங்களை படிப்பது? எத்தனை நாட்களுக்குப் படிப்பது? எதற்காக கம்ப்யூட்டர் படிப்புகளைப் படிக்க வேண்டும் நாம்? தற்போதைய கால கட்டத்தில் எந்தத் துறை கம்ப்யூட்டர்களை நம்பாமலிருக்கிறது? எண்ணற்ற வேலை வாய்ப்புகள் கம்ப்யூட்டர் சார்ந்த துறைகளில் தானே உருவாகின்றன. எனவே தான் கட்டாயம் நாம் ஒவ்வொருவரும் கம்ப்யூட்டர் திறன் பெறுவது அவசியமாகிறது.
உங்களது இலக்கு சார்ந்த படிப்பு தான் உங்களுக்குத் தேவை. கம்ப்யூட்டர் திறன் பெறுவதென்பது நீங்கள் ஏற்கனவே தீர்மானித்து வைத்துள்ள உங்களுக்கான இலக்கை அடைவதில் உதவ வேண்டும். இப்படி நீங்கள் தீர்மானித்து வைத்துள்ள இலக்கானது உங்களது ஆர்வத்தின் அடிப்படையில் தான் உருவாகிறது. எனவே உங்களது எதிர்காலம் வளம் பெற இலக்கை நிர்ணயிப்பதும் அதற்கேற்ற கம்ப்யூட்டர் படிப்புகளை மேற்கொள்வதும் மிக முக்கியம். உதாரணமாக படம் வரைவதில் மிகுந்த ஆர்வமுள்ள ஒருவர் கம்ப்யூட்டர் மொழிகளைப் படிப்பது தேவையில்லாத படிப்பாகிறது.