பிளஸ் 1ல் மாணவர்கள் குரூப்பை தேர்வு செய்யும் போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு என்ன? | Kalvimalar - News

பிளஸ் 1ல் மாணவர்கள் குரூப்பை தேர்வு செய்யும் போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு என்ன?ஆகஸ்ட் 30,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

பத்தாம் வகுப்பு படித்து முடித்து, பிளஸ் 1 சேரும் போது இந்த கேள்வி பெரிதாக மாணவர்கள் முன் நிற்கிறது. பலர் தங்கள் விருப்பத்துக்கும் திறமைக்கும் ஏற்ற குரூப்பை தேர்வு செய்து சாதிக்கின்றனர். சிலர் அவசரப்பட்டு குரூப் தேர்வு செய்துவிட்டு, பின்னர் அது தங்களுக்கு ஒத்துவரவில்லை என்று உணர்கிறார்கள்.

கணிதப் பிரிவு எடுப்பதா, அப்படியானால் கணிதத்துடன் உயிரியலா, கம்ப்யூட்டர் சயின்சா என்ற குழப்பம். கணிதம் இல்லாத அறிவியல் பிரிவை தேர்வு செய்வதா, மூன்றாவது குரூப்பை தேர்வு செய்வதா என்றெல்லாம் மாணவர்களுக்கு சந்தேகங்கள் வருகின்றன.

பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுவே அவர்கள் வாழ்க்கையின் திருப்புமுனையாக உள்ளது. முழு
விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் பயிலும் மாணவர்களால்தான் இத்தேர்வில் நன்கு சாதிக்க முடியும் என்பதால், பிளஸ் 1ல் குரூப் தேர்வுசெய்யும் போது, மாணவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். பொதுவாக குரூப் தேர்வு செய்யும் போது, மாணவர்கள் எது போன்ற
விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, சென்னை போதி நிறுவனத்தின் படிப்புகள் ஆலோசகர் பாரதி ராஜ்மோகன் தெரிவித்த போது, ‘பொதுவாக மாணவர்கள் 9ம் வகுப்புப் படிக்கும் போதே, எதிர்காலத்தில் தாங்கள் படிக்க வேண்டிய துறைகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நமக்கு என்ன திறமை இருக்கிறது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கு ஒரு லட்சியம் மனதில் பதிவாகும். அந்த லட்சியத்துக்கு ஏற்ற வகையில் மாணவர்கள் தாங்கள் படிக்க வேண்டிய பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

 மாணவர்கள் படிக்கும் போது, அவர்களுடைய ஆர்வம் படிப்பில் மட்டும் இருக்காது. பல விஷயங்களில் இருக்கும். எதில் ஆர்வம் மிகையாக இருக்கிறது. குறைவாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அவர்களுடைய தேவை என்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆர்வம், திறமை மற்றும் ஆளுமைத்திறன் (பெர்சனாலிட்டி) ஆகிய மூன்றையும் ஒரு மாணவர் உணர்ந்தால்தான், பிளஸ் 1ல் பாடங்களை தேர்வு செய்ய முடியும். இதுதான், பிளஸ் 2 முடித்தபின்னர் உயர்கல்விக்கான படிப்புகளையும் அவர்கள் எளிதாக தேர்வு செய்யுமுடியும்.

மாணவர்கள் முதலில் தன்னுடைய ஆர்வம் என்ன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். தன்னுடைய திறமை என்ன என்பது பற்றியும் அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆளுமைத்திறனில் நல்ல விஷயங்களும் பாதகமான விஷயங்களும் இருக்கும். அதன் அடிப்படையில் நான் எதுபோன்ற வேலைக்கு சென்றால் வெற்றியாளராக இருப்பேன் என்று அவர் தீர்மானிக்க வேண்டும். இந்த முடிவுகள்தான், அவர்கள் படித்து முடித்து வேலைக்கு செல்லும் வரை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்’ என்றார்.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ்காந்தி தெரிவித்த போது, ‘மாணவர்கள் எப்போதும் தனக்கு ஆர்வம் உள்ள படிப்புகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். பக்கத்து வீட்டுக்கார மாணவர் எடுத்திருக்கிறார். நண்பர் எடுத்திருக்கிறார். பெற்றோர் வற்புறுத்துகின்றனர் என்று கூறி, தன்னுடைய திறமைக்கும், விருப்பத்துக்கும் தொடர்பே இல்லாத ஒரு குரூப்பை தேர்வு செய்யக்கூடாது’ என்றார்.

தற்போது 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த விஷயங்களை மனதில் கொண்டால், படிப்புத் தேர்வு ஒரு பிரச்னையாக இருக்காது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us