மெட்டியராலஜி எனப்படும் வானிலை அறிவியல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றியும் படிப்புகள் பற்றியும் கூறலாமா? | Kalvimalar - News

மெட்டியராலஜி எனப்படும் வானிலை அறிவியல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றியும் படிப்புகள் பற்றியும் கூறலாமா?ஆகஸ்ட் 30,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

மெட்டியராலஜி எனப்படும் வானிலை அறிவியல் துறை வளிமண்டலம் பற்றிய அறிவியலின் ஒரு உட்பிரிவாகும். இது வானிலை மாற்றங்களையும் வானிலை பற்றிய முன்னறிவிப்புகளையும் மையமாகக் கொண்டு இயங்குகிறது. இத்துறை பூமியின் வளி மண்டலத்தில் நிகழும் இயற்பியல் வேதியியல் மாற்றங்களையும் இயக்கங்களையும், வளிமண்டலத்திற்கும், புவியின் மேற்பரப்பிற்கும் உள்ள தொடர்பு இயக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மழைக்காலத்தில் ‘டிவி’, வானொலி வாயிலாக நமக்கு முன்னறிவிப்புகளை வெளியிடுபவர்கள் இவர்களே. சுனாமி போன்ற நிகழ்வுக்குப்பின் இன்றைய நாட்களில் இத்துறையின் அவசியம் இன்றியமையாததாக மாறிவருகிறது. நல்ல கல்வித்தரமும் துறையில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர்களுக்கு இங்கு சிறந்த பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இத்துறையில் சிறந்து விளங்கும் வல்லுநர்களை மெட்டியரலாஜிஸ்ட் என்று கூறுகிறார்கள். இவர்கள் வளி மண்டலத்தில் நிகழும் பூமி தொடர்புடைய செயல்களை பற்றி ஆராய்ச்சி செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

மெட்டியராலஜி துறையில் பணியில் ஈடுபட விரும்புபவர்கள் பிளஸ் 2க்குப்பின் மெட்டிரியலாஜி அல்லது வானியல் பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளவேண்டும். பிளஸ் 2வில் இளநிலைப்பிரிவில் பி.எஸ்.சி., பி.டெக்., என்ற பிரிவுகளில் இளநிலைப்பிரிவில் பி.எஸ்.சி., பி.டெக்., என்ற பிரிவுகளில் மெட்டியராலஜி படிப்புகளைப் படிக்கலாம். இத்துறை படிப்புகளை இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களும் ஐ.ஐ.டிக்களும் தருகின்றன.

முதுநிலைப் படிப்புகளை எம்.எஸ்.சி., மற்றும் எம்.டெக்., படிப்புகளாக இரண்டு ஆண்டுகளில் படிக்க முடியும். முதுநிலைப் படிப்புகளைப் படிக்க விரும்புபவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பில் மெட்டியராலஜி, இயற்பியல் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய துறையில் படித்திருக்கவேண்டும். இது தவிர இத்துறையில் ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன.

இங்கே சில படிப்புகளும் அதற்கான கல்வித்தகுதிகளும் தரப்பட்டுள்ளன. இத்துறையில் மெட்டியராலஜியில் எம்.எஸ்.சி. அல்லது பி.எஸ்.சி.யில் இயற்பியல், வேதியியல் அல்லது தொடர்புடைய பிரிவில் படித்திருக்க வேண்டும். டிப்ளமோ இன் மெட்டிரியலாஜி அண்டு அட்மாஸ்பெரிக் சயின்ஸ் படிக்க மெட்டியராலஜியில் எம்.எஸ்.சி., படித்திருக்கவேண்டும். இத்துறையில் பி.டெக்., படிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2வில் இயற்பியல் வேதியியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். பி.எச்.டி., என்ற ஆராய்ச்சிப்படிப்புகளை படிக்க இத்துறையில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இத்துறையில் படித்தவர்களுக்குப் பெரும்பாலும் அரசுப்பணிகளே கிடைக்கிறது. இருந்தாலும், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையுடன் தொடர்புடைய சில தனியார் நிறுவனங்களும் இவர்களைப் பணியிலமர்த்துகின்றன.

ஒரு நாட்டின் ராணுவப்பணிகளில் படைகளை நகர்த்துவது, விமானப்படை இயக்கம், குண்டுகளை எறிதல், கடல் படையை இயக்குவது போன்றவற்றிற்கு வானிலை பற்றிய தகவல் இன்றியமையாதது. எனவே ஒரு நாட்டின் வலுவான ராணுவப் பின்னணிக்கு மெட்டிரியலாஜிஸ்ட்களின் தேவை முதுகெலும்பாக உள்ளது.

மெட்டியராலஜியில் பட்டப்படிப்பு அல்லது இத்துறை தொடர்புடைய மரைன் சயின்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வானிலை தொடர்புடைய பல்வேறு பணிகளைச் செய்கிறார்கள். உலகெங்கும் ராணுவம் தொடர்புடைய வெளிநாட்டுப் பணிகளிலும் இத்துறையில் படித்தவர்கள் பணிபெறும் வாய்ப்புகள் ஏராளம் உள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us