இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகம் டில்லியிலுள்ள அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவ நிறுவனத்துடன் இணைந்து அக்குபஞ்சர் டிப்ளமோ படிப்பை தருகிறது. அக்குபஞ்சர் துறையின் மதிப்பு பலராலும் உணரப்படும் விதத்தில் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. தீவிர மற்றும் அதி தீவிர நோயாளிகளுக்கு மாற்று சிகிச்சையாக அக்குபஞ்சர் அமையும் விதத்தை இந்த படிப்பு தெளிவுபடுத்துகிறது.
இப்படிப்பை குறைந்தது ஒரு ஆண்டிலும் அதிக பட்சமாக 3 ஆண்டிலும் படித்து முடிக்க வேண்டும். இதை அலோபதி, ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஓமியோபதி இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருப்பவர் படிக்கலாம். இதன்மூலம் மருத்துவப் படிப்பை ஆன்லைன் மற்றும் தொடர்பு வகுப்புகள் மூலமாகவும் பிராக்டிகல் வகுப்புகள் மூலமாகவும் இந்தியாவிலேயே முதல் முறையாகப் படிக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. ஆன்லைன் தேர்வுகள், ஆண்டு இறுதித் தேர்வுகள் என்ற ரீதியில் உள் மதிப்பீட்டு முறையும் இப்படிப்பில் உண்டு.
அக்குபஞ்சர் என்பது பண்டைய காலம் தொட்டு கடைப்பிடிக்கப்படும் மருத்துவ முறை என்பதுடன் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது இதன் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இப்படிப்பின் தியரி எனப்படும் பாடங்களை ஆன்லைனில் படிக்கலாம். பிராக்டிகல் பயிற்சியைப் பெற விரும்பும் மருத்துவப் பட்டதாரிகள் இந்தியாவில் இக்னோ அமைக்கவிருக்கும் 8 மையங்களில் ஒன்றில் இதைப் படிக்கலாம். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே இதைப் படிக்கலாம்.