குரூப் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். அடுத்ததாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கிறேன். எப்படி இதற்குத் தயாராவது? | Kalvimalar - News

குரூப் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். அடுத்ததாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கிறேன். எப்படி இதற்குத் தயாராவது?ஆகஸ்ட் 09,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 நேர்முகத் தேர்வுகள் குறித்து பல கேள்விகள் எங்களுக்கு வந்துள்ளன. பொதுவாக நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை
பின்வருமாறு பிரிக்கலாம்.
* பட்டப்படிப்பில் படித்த பாடங்களிலிருந்து கேள்விகள்
* நுழைய விரும்பும் துறை பற்றிய கேள்விகள்
* பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள்
* தனி நபர் பற்றிய கேள்விகள்

பொதுவாக இத்தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளவர்களில் பலரும் பட்டப்படிப்பை முடித்து பல ஆண்டுகளாகியிருப்பவர்கள் தான். எனினும் உங்களது படிப்பு தொடர்பான கேள்விகளைத் தவிர்க்க முடியாது. என்ன பட்டப்படிப்பு முடித்திருக்கிறீர்கள் என்பதிலிருந்து கேள்விகள் இடம் பெறலாம். பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் பற்றிய கேள்விகள் கடந்த முறை சிறப்பாகக் கேட்கப்பட்டன. அதிலும் நேர்முகத் தேர்வு தினத்தைய செய்திகளையும் அதன் பின்புலமான அம்சங்கள் பற்றிய கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டன. எனவே உங்களது கவனம் நடப்புச் செய்திகளில் இருப்பது கட்டாயம் தேவை. வெறும் அப்ஜக்டிவ் கேள்விகள் போல அல்லாமல் அனலிடிகல் என்னும் முறையில் பரவலாக ஆழமாகக் கேட்கப் பட்டுள்ளன. செய்தித்தாள் வாசிப்பதும் அவற்றை மனதில் கொள்வதும் அவசியம்.

தனிநபர் பற்றிய கேள்விகளில் எதற்காக உங்களுக்கு இந்த வேலை கொடுக்கப்பட வேண்டும், உங்களது சிறப்புத் திறன் என்ன, இந்த வேலை தரப்படாவிட்டால் என்ன செய்வீர்கள், பலம் என்ன, பலவீனம் என்ன, பொழுதுபோக்கு என்ன போன்ற கேள்விகள் பொதுவாக நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படுகின்றன. ஒவ்வொரு பதிலிலிருந்தும் அடுத்த கேள்வி கேட்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.

நுழைய விரும்பும் துறைகள் பற்றிய தகவல்களை அறிவதும் முக்கியம். மேலும் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் எனத் தொடங்கி அது பற்றிய தகவல்கள் கேட்கப்படலாம். பெற்றோரின் வேலை தொடர்பான கேள்விகள், திருமணமாகியிருந்தால் கணவர்/மனைவியின் வேலை தொடர்பான கேள்விகளையும் எதிர்பார்க்கலாம். வெறும் மனப்பாடம் மூலமாக நேர்முகத் தேர்வுகளில் பதில் சொல்ல முடியாது என்பதை அறியவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us