பி.காம்., பி.எஸ்சி., பி.ஏ., போன்ற படிப்புகளுக்கு இன்றும் மவுசு உள்ளதா? | Kalvimalar - News

பி.காம்., பி.எஸ்சி., பி.ஏ., போன்ற படிப்புகளுக்கு இன்றும் மவுசு உள்ளதா?ஜூன் 21,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., என்ற படிப்புகளைத் தவிர பிற படிப்புகளையே 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் அந்தத் தகுதியைக் கொண்டும் திறனைக் கொண்டும் பெற்ற வேலையினால் தான் இன்று அவர்களது பிள்ளைகளை பி.இ., பி.டெக்., போன்ற நவீன படிப்புகளைப் படிக்க வைக்க முடிகிறது. எனவே எந்தப் படிப்பும் நல்ல படிப்பு தான்... அதை நன்றாகப் படிக்கையிலே என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இந்த ஆண்டு சேர்க்கை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமானவைகளாக உள்ளன. பி.காம்., படிப்புக்காக விண்ணப்பிப்பவர்களின் முதல் விருப்பமாக இருப்பது பி.காம்., படிப்பு தான் என்று சென்னை எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லூரியின் முதல்வர் நிர்மலா பிரசாத் சமீபத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் டாப் படிப்புகளில் ஒன்றாக பி.காம்., விளங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அது போலவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பி.காம்., படிப்புக்கான விண்ணப்பங்கள் 20 சதவீதம் அதிகமாக பெறப்பட்டுள்ளதாக பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர் மார்கரெட் ராதா ராணி தெரிவித்துள்ளார். டி.ஜி., வைஷ்ணவா கல்லூரியில் 210 இடங்களுக்கு 3 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. எத்திராஜ் கல்லூரியின் 140 சீட்களுக்கு 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனராம். இவற்றில் பொதுவாக பொதுப் பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 95 சதவீதத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பி.பி.ஏ., படிப்புக்கும் இது போலவே கடுமையான டிமாண்ட் உள்ளது.

இந்த ஆண்டு பி.எஸ்சி., படிப்புகளில் கணிதத்திற்குத் தான் முதலிடம். சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் 70 இடங்களுக்கு ஆயிரம் விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளனவாம். இந்தப் படிப்புக்காக விண்ணப் பித்துள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்கள் 1100 மதிப் பெண்களுக்கு மேல் பெற்றவராம்.

அடிப்படையில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பேசிக் சயின்ஸ் படிப்பு ஒன்றை முடித்து விட்டு பின் கம்ப்யூட்டர் சயின்ஸில் சிறப்புப் பட்ட மேற்படிப்பைப் படித்தால் நல்ல வேலைகளைப் பெற முடியும் என மாணவர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர் என்று டிஜி வைஷ்ணவா கல்லூரி முதல்வர் நரசிம்மா தெரிவித்துள்ளார்.

பொதுவாக பி.எஸ்சி., கணிதப் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண் 90 சதவீதத்துக்கும் மேல் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு தான் அதிக கிராக்கியுள்ள படிப்பாக தொடருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு அடிப்படை சயின்ஸ், உயிரியல் போன்ற படிப்புகள் அதிக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

கலைப் பிரிவுப் படிப்புகளில் ஆங்கில இலக்கியம் முதலிடத்தைப் பெறுகிறது. ஆனால் வரலாறு பின்தங்குகிறது. விசுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்புக்கான டிமாண்ட் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தான் இந்தப் படிப்புக்கு பொதுவாக நுழைவுத் தேர்வு மூலமாக சேர்க்கை நடைபெறுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us