விமானப் பணிப் பெண்ணாக பணிபுரிய விரும்புகிறேன். இத்துறை பற்றிக் கூறவும். | Kalvimalar - News

விமானப் பணிப் பெண்ணாக பணிபுரிய விரும்புகிறேன். இத்துறை பற்றிக் கூறவும்.மே 30,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

விமானப் பயணம் என்றவுடன் பலருக்கும் ஞாபகத்துக்கு வருவது பயணத்தில் தரப்படும் இன்முகச் சேவை தான். விமானப் பயணத்தை அமைதியானதாகவும் பார்த்துக் கொள்வது இவர்கள் தான். ஏதோ இறைவனால் அந்த குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு பிரத்யேகமாக நமக்காக அனுப்பப்பட்டதேவதூதர்கள் போல அவர்கள் செயல்படுகிறார்கள். மிக மிகச் சிலருக்கு மட்டுமே வாய்த்த இந்த ஏர்ஹோஸ்டஸ் பணியானது இன்று பரவலாக பலரும் அறிந்திருக்கக் கூடிய துறையாக மாறியுள்ளது. தனியார் விமானச் சேவை விரிவாக்கத்துக்குப் பின் இது சாத்தியமாகியுள்ளது.

அமைதியாகவும் நேர்த்தியாகவும் செயல்படக்கூடிய பெண்களுக்கு இது ஏற்ற துறை. இதில் சேர்ந்து மிளிர, மிகச் சிறப்பான தகவல் தொடர்புத் திறனும் அவசியமான தகுதியாகும்.பலரையும் கவரக்கூடியதாகவும் பரபரப்பான ஆர்வத்தை உருவாக்கக்கூடியதாகவும் இது விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் பயணம், பயணம் என இவர்களது வாழ்க்கை சவால் மிகுந்ததாக இருப்பதால், இந்தப் பணிக்காகத் தரப்படும் சம்பளம் அதிகமாக இருக்கிறது. பொறுமையும் கடுமையான உழைப்பும் இதற்கு கூடுதல் தேவைகளாக இருக்கின்றன. இரவு, பகல் என நேரங்காலமின்றி பணி புரிய வேண்டியிருக்கும் பணி இது. எனவே அர்ப்பணிப்பு உணர்வு இருப்பவரே இதில் மிளிருகிறார்கள்.

சுற்றுலாவியல் அல்லது ஓட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தகுதியுடன் மேலே குறிப்பிட்டுள்ள குணங்களையும் திறன்களையும் பெற்றிருப்பவர் இதற்கு விரும்பப்படுகிறார்கள். சிறப்பான உடற்தகுதியும் எடுப்பான எளிதான தோற்றமும் கூடுதல் தேவைகள். ஏர்ஹோஸ்டசாக பணியில் சேருபவர்கள், ஹெட் அட்டென்டன்ட் மற்றும் சீனியர் பிளைட் அட்டென்டன்ட் என பதவி உயர்வு பெறலாம். ஏர்ஹோஸ்டஸ் பணிக்கான விளம்பரங்கள் செய்தித்தாள்களில் வெளியிடப்படுகின்றன. நிறுவனங்களைப் பொறுத்து சம்பளம் மாறுகிறது.

கோல்கட்டா, சென்னை, மும்பை போன்ற மாநகரங்களில் ஏர்ஹோஸ்டஸ் பயிற்சி நிறுவனங்கள் பல உள்ளன. சமீப காலத்தில் கோயம்புத்தூர் போன்ற 2ம் நிலை நகரங்களிலும் இதற்கான பயிற்சி மையங்கள் தோன்றியுள்ளன. விமானப் பணிப் பெண்ணாகப் பணி புரிய விரும்புபவர்கள் எல்லோருமே இதில் பணி புரிய முடிவதில்லை. உங்களது குடும்பச் சூழல், பெற்றோரின் வருமானம், அடிப்படையில் உங்களுடைய கூர்மையான திறன், நேர்த்தியாக உங்களது தோற்றத்தை வெளிக்காட்டும் திறன் என பல்வேறு காரணிகள் உங்களது வெற்றியில் முக்கியப் பங்காற்றும். எனவே இவற்றை கவனத்தில் கொண்டு முடிவெடுக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us