குழப்பம் உண்டாக்கும் எழுத்துகள் | Kalvimalar - News

குழப்பம் உண்டாக்கும் எழுத்துகள்

எழுத்தின் அளவு :

தமிழில் ர, ற ஆகிய எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதும் சொற்களுக்கிடையே எப்போதும் குழப்பமுண்டு. நன்கறிந்த சொற்களைப் பிழையில்லாமல் எழுதிவிடுவோம். ஆனால், புதிதாகவோ சற்றே கவனக்குறைவாகவோ எழுதுகையில் பிழை ஏற்பட்டுவிடும். எழுத்தினை மாற்றி எழுதிவிடுவோம். பிழைகளைக் களைவதற்கு அந்தச் சொற்களின் பொருளை நன்கு அறிந்திருத்தல் ஒன்றே வழி. இவ்வெழுத்துகள் சொற்களில் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
'ர' வரிசை எழுத்துகள் இடையின உயிர்மெய்கள். 'ர் 'என்பது இடையின மெய்.

'ற' வரிசை எழுத்துகள் வல்லின உயிர்மெய்கள். 'ற்' என்பது வல்லின மெய்.
ஒரு சொல்லின் கடைசி எழுத்தாக 'ற்' என்ற வல்லின மெய் தோன்றாது. ஏனெனில் தமிழில் தனிச்சொல்லுக்கு வல்லினமெய் ஈற்றெழுத்தாதல் இல்லை. 'ர்' என்னும் இடையின மெய் மட்டுமே தோன்றும். ஆர், ஈர், நார், வேர், பயிர், உயிர், வளர், சுவர், தவிர், கூறுவர், ஏற்றுவர் - இவற்றில் சொல்லுக்குக் கடைசி எழுத்தாக 'ர்' வருவதைக் காண்க.
சொல்லுக்கு ஈற்றெழுத்தாக 'று' என்னும் வல்லினக் குற்றியலுகரம் எண்ணற்ற சொற்களில் வரும். ஆறு, ஈறு, நாறு, வேறு, பயறு, தவறு, கூறு, ஏற்று.
'ற்' என்னும் மெய்யெழுத்து ஒரு சொல்லுக்கு இடையில் மட்டுமே தோன்றும். காற்று, நாற்று, கற்க, விற்பனை, பொற்குடம்.
ற, ர ஆகிய இரண்டு எழுத்துகளும் ஒரு சொல்லுக்கு முதலெழுத்து ஆவதில்லை. ஆனால், பிறமொழிச் சொற்கள் 'ர' என்னும் இடையின எழுத்தினை முதலெழுத்தாகக் கொண்டு தோன்றும். அத்தகைய சொற்களைத் தமிழ் இயல்பின்படி எழுதுவதற்கு முன்னே அ, இ, உ ஆகிய உயிரெழுத்துகளைச் சேர்ப்போம். அரங்கன், இரத்தம், உரோமாபுரி.
'ர்' என்ற மெய்யை அடுத்து இன்னொரு புள்ளியுடைய மெய்யெழுத்து தோன்றலாம். உயர்ச்சி, பயிர்த்தொழில், வளர்ச்சி, எதிர்ப்பு.
'ற்' என்ற மெய்யை அடுத்து இன்னொரு மெய்யெழுத்து தோன்றாது. கற்றல், காவற்பணி, காற்சிலம்பு.
ஒரே வகையான ஒலிப்பில், இரண்டு எழுத்துகளும் பயிலும் வெவ்வேறு சொற்கள் எண்ணற்றவை இருக்கின்றன. அவற்றினை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.
பரவை - கடல்.
பறவை - பறக்கும் உயிரினம்
பயிர் - நாற்றுவகை.
பயறு - பருப்புவகை.
நெரி - கூட்டத்தில் நெரிபடுதல்.
நெறி - வழி
கரி - அடுப்புக்கரி.
கறி - ஊன்
இவ்விரண்டு எழுத்துகளின் சொற்பயன்பாடுகளைத் தெளிவாக அறிந்திருந்தால் பிழை வராது.
- மகுடேசுவரன்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us