வென்ஹுய் விருது | Kalvimalar - News

வென்ஹுய் விருது

எழுத்தின் அளவு :

ஆசிய-பசிபிக் பகுதியில் கல்வி முறையின் பல்வேறு பரிமாணங்களில் புதுமையான திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், கற்றல் மீட்புக்கான புத்தாக்க கண்டுபிடிப்புக்கு வென்ஹுய் விருது வழங்கப்படுகிறது. 




அறிமுகம்:


வளர்ச்சிக்கான கல்வி கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான யுனெஸ்கோ ஆசிய-பசிபிக் திட்டம் - ஏ.பி.இ.ஐ.டி., மற்றும் யுனெஸ்கோவிற்கான சீன மக்கள் குடியரசின் தேசிய ஆணையம் இணைந்து வென்ஹுய் விருதை வழங்குகின்றன. கல்வியில் புதுமையான கொள்கைகளை அடையாளம் கண்டு, அங்கீகரித்து, ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு 2010ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. 



கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் 1.6 பில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.1 டிரில்லியன் மணிநேரம் கால அளவிலான நேரடியான கல்வி கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புற, வருமானம் குறைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், கற்றல் மீட்பில் புத்தாக்க கல்வி கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த இரு தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்கும்  வகையில் இந்தாண்டிற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



விருதின் அம்சங்கள்:


தேர்வு செய்யப்படும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு தலா ஒரு சிறப்புச் சான்றிதழும், 20 ஆயிரம் அமெரிக்க டாலரும் பரிசாக வழங்கப்படும். தவிர, குறிப்பிடும்படியான கல்வி மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள மேலும் 2 பேருக்கு மரியாதை நிமித்தமான சிறப்பு விருது அளிக்கப்படுகிறது. இதுவரை, 19 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 பேருக்கு வென்ஹுய் விருதும் 34 பேருக்கு மரியாதை நிமித்தமான சிறப்பு விருதும் வழங்கப்படுள்ளன. 



தகுதிகள்:


* ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள யுனெஸ்கோ உறுப்பு நாடுகளின் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களாக இருக்க வேண்டும்.


* 21ம் நூற்றாண்டின் கல்வி தேவைக்கு ஏற்ப, புதுமையான நடைமுறைகளைத் தொடங்கி, உருவாக்கி, செயல்படுத்தியிருக்க வேண்டும். 


* கண்டுபிடிப்புகள் கல்வி வாய்ப்புகள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.


* கடந்த 3 ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்ட திட்டமாக இருத்தல் வேண்டும் ஆகியவை உட்பட பல்வேறு தகுதிகள் மற்றும் அளவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 27



விபரங்களுக்கு: 


இ-மெயில்: Wenhui.Award@unesco.org 


இணையதளம்: www.education.gov.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us