சிறு பூச்சிகளை உண்டு பட்டுப்புழுக்கள் வாழ்கின்றன.
தவறு. பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளை மட்டுமே உணவாக உட்கொள்ளும். மல்பெரி செடிகளை நடவு செய்த ஆறு மாதத்திற்குப் பிறகு, பட்டுப்புழுக்களுக்கு அதன் இலைகள் உணவாக அளிக்கப்படுகின்றன. ஒரு பட்டு முட்டையில் 450 - 700 வரை பட்டுப்புழுக்கள் இருக்கும். இளம் புழுக்கள் முதல் 14 நாட்களில் மல்பெரி இலைகளை வேகமாக உண்ணும். பின் இரண்டரை நாட்கள் தோலுரிக்கும். அப்போது இலையை உண்ணாது. 18ஆவது நாளில் இருந்து தொடர்ந்து 36 மணிநேரத்திற்குள், தன் உமிழ்நீரைச் சுரந்து பட்டுக்கூடு கட்டும். இக்கூட்டின் எடை 2 கிராம் ஆகும். புழுக்கள் 5 கிராம் எடை வரை இருக்கும்.
சால்மோனெல்லோசிஸ் என்பது பாக்டீரிய நோய்த்தொற்று ஆகும்.
உண்மை. சால்மோனெல்லோசிஸ் (salmonellosis) என்பது, சால்மோனெல்லா வகை பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய ஒரு நோய்த்தொற்றாகும். சுகாதாரமற்ற உணவுகளால் சால்மோனெல்லா பாக்டீரியா பரவுகிறது. இதனால் குடல் நோய்கள், குடல் வீக்கம் ஆகியவை ஏற்படும். வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாகின்றன. இது டைஃபாய்டு காய்ச்சலையும் ஏற்படுத்துகிறது.