ஆட்படுதல், உட்படுதல் ஆகிய இரண்டு சொற்களுக்கும் உரிய வேறுபாடு என்ன? இரண்டுக்கும் ஒரே பொருள்தானா? எந்தச் சொல்லை எங்கே பயன்படுத்துவது என்பதை இங்கே பார்க்கலாம்.
முதலில், 'ஆட்படுதல்' என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம். படு என்ற வினைச்சொல் பல சொற்களுக்குப் பின்னால் தோன்றும். தடைபடுதல், விடுபடுதல், முரண்படுதல் என்று பலவாறு வருகிறது.
இங்கே ஆள் என்பது ஆளுதல் என்ற பொருளில் வரும் சொல்லாகும். ஆள்படுதல் => ஆட்படுதல் என்றால், ஒன்றின் ஆளுகைக்குள் வருவது எனப்படும். ஆளப்படுவதுதான் ஆட்படுவது. ஏதோ ஒன்றின் செல்வாக்கிற்கு அல்லது கட்டளைக்கு இணங்கிப் போவது.
பழைய பாடல்களைக் கேட்கும்போது, இளமை நினைவுகளுக்கு ஆட்பட்டேன்.
அந்த நூலைப் படித்தால், பலவகையான உணர்ச்சிகளுக்கு ஆட்படுவோம்.
இவ்வாறு 'ஆட்படுதலை' எழுதுகிறோம்.
அடுத்து, உட்படுதல். ஏதோ ஒன்றின் வரம்புக்குள் சென்றுவிடுதல். உள்ளிருத்தல்தான் உட்படுதல்.
மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்.
விதிகளுக்கு உட்பட்டுச் செய்யப்பட்ட திருத்தங்கள்.
முதியோர் உட்பட பலரும் காயமடைந்தனர்.
இப்போது ஆட்படுதல், உட்படுதல் ஆகிய இரண்டு சொற்களையும் சேர்த்து எழுதிப் பார்க்கலாம். அப்போது நன்கு விளங்கும்.
நான் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கொள்கைக்கு ஆட்பட்டவன்தான். அதே நேரத்தில், என் ஊர் நலனைக் காக்கவேண்டிய கடமைக்கும் உட்பட்டவன்.
இப்போது விளங்குகிறதா?
- மகுடேசுவரன்