இந்திய அறுவைச் சிகிச்சையின் தந்தை
சுஷ்ருதர் (Sushruta), பழங்கால இந்தியாவின் புகழ்பெற்ற அறுவைச் சிகிச்சை நிபுணர். அவர் எழுதிய நூலின் பெயர் சுஷ்ருத சம்ஹிதா (Sushruta Samhita). சமஸ்கிருத மொழியில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை பற்றிய விரிவான விளக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது. சுஷ்ருத சம்ஹிதா 186 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில், 1,120 நோய்கள், 700 மருத்துவத் தாவரங்கள், 64 செய்முறைகள் இடம் பெற்றுள்ளன.
தீக்காயங்கள், விபத்து உள்ளிட்ட காரணங்களால் சேதமடைந்த தோல், உடலின் பாகங்களைச் சரிசெய்வதற்கும் மறுசீரமைப்பதற்கும் பல நுட்பமான மருத்துவ முறைகளை சுஷ்ருதர் கையாண்டுள்ளார்.
சிதைவடைந்த மூக்கை அவர் அறுவைச் சிகிச்சை மூலம் சரியாக்கி உள்ளார். கண்ணில் ஏற்படும் வெண்படலம் பார்வையைக் குறைக்கும். இந்தப் புரையை அவர் ஊசி கொண்டு அகற்றி, கண்புரை அறுவைச் சிகிச்சை செய்திருக்கிறார்.
அவர் கத்தி, அரிவாள், ஊசி உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்தியுள்ளார். இந்தக் கருவிகள் இரும்பு, தாமிரம் உள்ளிட்ட உலோகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
சிறுநீர்ப்பையில் உள்ள கற்களை அகற்றவும், வயிற்றில் இறந்த கருவை நீக்கவும் செய்துள்ளார்.
காயங்களை மூட தையல் போட்டுள்ளார். நோயாளிக்கு வலி இல்லாமல் இருக்க மயக்க மருந்தைப் பயன்படுத்தி இருக்கிறார்.
மஞ்சள், வேம்பு, சந்தனம் உள்ளிட்ட கிருமி நாசினிகளையும், கட்டுப்போடும் துணிகள், மூலிகைகள், எண்ணெய்களையும் பயன்படுத்தியுள்ளார்.
வயிற்றுப் பகுதியில் ஏற்படும் குடல் இறக்கம், தொண்டையில் உருவாகும் கட்டிகளையும் அவர் அகற்றியுள்ளார். இன்றைய நவீன அறுவைச் சிகிச்சை முறைக்கு முன்னோடியாகத் திகழும் சுஷ்ருதர், இந்திய அறுவைச் சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.