தமிழே அமுதே | Kalvimalar - News

தமிழே அமுதே

எழுத்தின் அளவு :

எல்லாச் சொற்களையும் பிரித்தெழுத முடியுமா?

முற்காலத்தில் தமிழ்ச் சொற்களைச் சேர்த்தே எழுதினோம். சொல் சொல்லாகப் பிரித்து எழுதும் போக்கு, பிற்காலத்தில் தோன்றியதுதான். முன்பு எவ்வளவு பெரிய செய்யுளானாலும் சேர்த்துத்தான் எழுதப்பட்டிருக்கும்.
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை' என்பது ஒரு குறளின் முதலடி. இவ்வாறு சொல் சொல்லாகப் பிரித்து எழுதுவது தற்கால வழக்கு. இவ்வழக்கு, அச்சுப்பொறி கண்டுபிடிக்கப் பட்டவுடன் பரவலானது. அதற்கும் முன்னே சொற்களுக்கிடையே இடைவெளி விடும் பழக்கமும் இல்லை. பிரித்தெழுதும் வழக்கமும் இல்லை.

பிறகு உரைநடையில் சொல் சொல்லாகப் பிரித்து எழுதினார்கள். பதிப்பித்தார்கள். செய்யுளில் சீர் சீராகப் பிரித்துக் காட்டினார்கள். இவ்வாறு எழுதுவதும் அச்சிடுவதும் எல்லோரும் எளிமையாகப் புரிந்துகொள்ள உதவின.
சேர்த்து எழுதப்படும் தொடர் எப்படி இருந்தது? 'அன்புமறனுமுடைத்தாயினில்வாழ்க்கை' என்று ஒரே தொடராகவே எழுதப்பட்டது. கோவில் கல்வெட்டுகள் யாவும் இத்தகைய தொடர் அமைப்புகளிலேயே இருக்கின்றன. அதுதான் முற்கால வழக்கு.
பிரித்து எழுதும் முயற்சியில் எல்லாவற்றையும் பிரித்து எழுதிவிட முடியுமா? அதுவும் இயலாது. உரிய இடங்களில் சேர்த்தேதான் எழுத வேண்டும். பிரித்து எழுதினால் பொருள் மாறிவிடும்.
'பழங்கள்' என்றால் பல பழங்கள் என்ற பன்மைப்பொருள் கிடைக்கும்.
'பழம் கள்' என்று பிரித்து எழுதிவிட்டால் என்னாகிறது? பழமும் கள்ளும் என்ற பொருள் வந்துவிடுகிறது.
'வீட்டிலிருந்து வருகிறான்' என்பது, 'வீட்டிலிருந்து கிளம்பி வருகிறான்' என்ற பொருளைத் தரும். 'வீட்டில் இருந்து வருகிறான்' என்றால் என்னாகும்? 'வீட்டிலேயே இருக்கிறான்' என்ற வேறு பொருளுக்குப் போய்விடும்.
எல்லாச் சொற்களையும் பிரித்தெழுதினால் நன்றாகவும் அமையாது. படிக்கவில்லை, கொடுக்கவில்லை, கூறவில்லை போன்ற சொற்கள் இருக்கின்றன. அவற்றைப் பிரித்தெழுத முயன்றால், ஒலிப்பு கெட்டுவிடும். படிக்க இல்லை, கொடுக்க இல்லை, கூற இல்லை என்று வந்தால், நன்றாகவா இருக்கும்? ஒலிப்பே மாறிவிடுகிறது. அதனால், அத்தகைய சொற்களை நாம் பிரித்து எழுதுவதில்லை. சேர்த்தே எழுதுகிறோம்.
- மகுடேசுவரன்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us