உலகின் ஆராய்ச்சி உதவி திட்டங்களில் பிரதான ஒன்றான, புல்பிரைட் உதவித்தொகை திட்டம் பிப்ரவரி 1950ல், அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் யு.எஸ். தூதர் லோய் டபிள்யூ. ஹென்டர்சன் ஆகியோரால் கையெழுத்திட்டப்பட்டது. 2022-23ம் ஆண்டிற்கான பல்வேறு புல்பிரைட் உதவித்தொகை திட்டங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கியத்துவம்:
இந்த திட்டத்தை நிர்வகித்து வந்த அமெரிக்க கல்வி அறிக்கட்டளை, 2008ம் ஆண்டில் அமெரிக்க-இந்தியா கல்வி அறக்கட்டளை (யு.எஸ்.ஐ.இ.எப்.,) என பெயர் பெற்றது. புதிய ஒப்பந்தத்தின் படி, மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கு பெறும் இத்திட்டங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் அதிக ஆராய்ச்சி மாணவர்கள் பங்குபெறும் திட்டமாகவும் புல்பிரைட் உதவித்தொகை திட்டம் விளங்குகிறது.
புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் உதவித்தொகை:
அமெரிக்காவில் முதுநிலை பட்டப்படிப்பைத் படிக்க விரும்பும் தகுதியான இந்திய மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட இந்தியக் கல்வி நிறுவனத்தில் இளநிலை அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பை குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக நான்கு ஆண்டு இளநிலை படிப்பைப் படித்தவராகவும் இருக்க வேண்டும். அதற்குக் குறைவான கால அளவை கொண்ட படிப்பு என்றால் முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்திருக்க வேண்டியது அவசியம். துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 3 ஆண்டு முழுநேர பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு முன் அமெரிக்காவில் எந்த உயர்கல்வியும் படித்திருக்கக் கூடாது.
பிரிவுகள்:
குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளில் கீழ் முதுநிலைப் பட்டப் படிப்பைப் பயில விரும்பும் மாணவர்களுக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. அவை,
* கலாச்சார பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியக ஆய்வுகள் உட்படக் கலை படிப்புகள்
* பொருளாதாரம்
* சுற்றுச்சூழல் அறிவியல்
* உயர் கல்வி நிர்வாகம்
* சர்வதேச விவகாரம்
* சர்வதேச சட்டம்
* இதழியல்
* பொது நிர்வாகம்
* பொது சுகாதாரம்
* நகர்ப்புறம் மற்றும் பிராந்திய திட்டமிடல்
* மகளிர் மற்றும் பாலினம் சார்ந்த படிப்புகள்
உதவித்தொகைகள் மற்றும் சலுகைகள்:
* தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஜே- 1 விசா
* அமெரிக்க வந்து செல்வதற்கான விமான பயணச் சீட்டு
* கல்விக் கட்டணம் மற்றும் தங்கும் வசதி
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனமாக படித்து குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை சரியாக இணைக்க வேண்டியது அவசியம்.
யு.எஸ்.ஐ.இ.எப்., செயல்படும் இடங்கள்:
இத்திட்டத்தை நிர்வகிக்கும் யு.எஸ்.ஐ.இ.எப்., இந்தியாவில், புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்படுகிறது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 17
விபரங்களுக்கு: http://www.usief.org.in
இ-மெயில்: masters@usief.org.in