அரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

அரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

தமிழக கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும், நுண்கலை பிரிவு கல்லுாரிகளில், இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கலைகள் கற்பிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கு, நேற்று முதல், மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.


சென்னை, அடையாறில் உள்ள, தமிழ்நாடு அரசு இசை கல்லுாரியில், குரலிசை மற்றும் வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், கடம், கஞ்சிரா, முகர்சிங், நாதஸ்வரம், தவில் போன்ற வாத்திய இசைக்கான, மூன்றாண்டு பட்டப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகளும் கற்றுத் தரப்படுகின்றன. பெண்களுக்கு மட்டும், இரண்டாண்டு கால, நட்டுவாங்க இசை டிப்ளமா படிப்பும் உள்ளது.


இப்படிப்புகளுக்கு, 16 முதல், 21 வயது வரையுள்ள, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.கட்டட கலைசென்னை, மாமல்லபுரத்தில் உள்ள, அரசு கட்டட கலை மற்றும் சிற்பக்கலை கல்லுாரியில், நான்காண்டு பட்டப்படிப்பாக, மரபு கட்டடக் கலையில், பி.டெக்., மற்றும் மரபுச் சிற்பக்கலை, மரபு ஓவியம் மற்றும் வண்ணப்படம் வரையும் வகையில், பி.எப்.ஏ., படிப்புகள் உள்ளன. இதற்கு, பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஓவியம், சிற்பம்சென்னை, எழும்பூர் மற்றும் கும்பகோணத்தில் இயங்கி வரும் கவின்கலை கல்லுாரிகளில், நான்காண்டு இளங்கலை, இரண்டாண்டு முதுகலை படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.


இளங்கலையில், விஷுவல் கம்யூனிகேஷன் என்ற காட்சிவழித் தொடர்பு வடிவமைப்பு, சிற்பக்கலை, சுடுமண் வடிவமைப்பு, துகிலியல் வடிவமைப்பு, பதிப்போவியம் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. இளங்கலை படிப்புக்கு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளுக்கு, தனித்தனியாக வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. 


விண்ணப்பங்களை, www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள, ரிஜிஸ்ட்ரேஷன் பகுதிக்கு சென்று, ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். கல்விக் கட்டணத்தை, அந்தந்த கல்லுாரி முதல்வர்களுக்கு சென்று சேரும் வகையில், வங்கியில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க, அடுத்த மாதம், 17ம் தேதி வரை அவகாசம் உள்ளது.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us