சுற்றுலாத் துறையில் ஈடுபட விரும்புகிறேன். இதில் முறையான படிப்பை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

சுற்றுலாத் துறையில் ஈடுபட விரும்புகிறேன். இதில் முறையான படிப்பை எங்கு படிக்கலாம்?மார்ச் 29,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


மதுரையிலிருக்கும் நீங்கள் சுற்றுலா தொடர்பான படிப்புகளைப் படிப்பதில் எந்த சிரமமும் இல்லை. மதுரை நகரமே ஒரு பிரமாதமான சுற்றுலாத் தலம் அல்லவா? உங்களது கடிதத்திலிருந்து நீங்கள் தற்போது பிளஸ் 2 படிப்பதை அறிந்து கொண்டோம். சுற்றுலா வருபவர்கள் யார்? வெளிநாட்டினரும் வெளிமாநிலத்தினரும் தான் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அல்லவா? மேலும் நம் மாநிலத்தவரும் கூட வருகின்றனர். எனவே தமிழ் தவிர பிற மொழிகளில் நீங்கள் பேசப் படிக்க எழுதத் தெரிந்து கொள்வது முக்கியம். குறிப்பாக இந்தியை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆங்கிலத்தில் மிகச் சிறப்பான பேச்சுத் திறனைப் பெற வேண்டும். முடிந்தால் பிரெஞ்சு, ஜப்பானிய மொழி போன்ற ஒரு வெளிநாட்டு மொழியிலும் அடிப்படைத் தகவல் தொடர்புத் திறனைப் பெற முயற்சியுங்கள். உங்கள் ஊர் ரிக்ஷாக்காரர் கூட இவற்றில் அடிப்படைத் திறனைப் பெற்றிருப்பதை நீங்கள் ரயில்வே ஸ்டேஷன் போன்றவற்றில் சிறிது நேரம் நின்றிருந்தால் கூட கவனித்திருக்க முடியும். இது தவிர இந்திய கலாசாரம், வரலாறு மற்றும் புவியியல் போன்றவற்றிலும் நீங்கள் சிறப்பான தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

இவை அனைத்தையும் நீங்கள் பட்டப்படிப்பு முடிக்கும் போது பெற்றிருந்தால் கூட போதுமானது. முறையான சுற்றுலாப் படிப்பாக நீங்கள் பி.எஸ்சி., டூரிசம் படிக்கலாம். மதுரையிலுள்ள மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகக் கல்லூரியில் இதைப் படிக்கலாம். இதே கல்வி நிறுவனத்தில் எம்.ஏ., சுற்றுலாக் கல்வியும் நடத்தப்படுகிறது. எம்.ஏ., படிக்க சுற்றுலாக் கல்வியில் பி.ஏ., படிப்பை கட்டாயம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல படிப்புகளில் ஒன்றான சுற்றுலாக் கல்வியை நீங்கள் மேற்கொள்ள விரும்பினால் இங்கே நாம் குறிப்பிட்டுள்ள திறன்களைப் பெற கட்டாயம் முயற்சிக்கவும். நிச்சயம் இத்துறையில் நீங்கள் சிறப்பாக உருவாகலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us