கோஸ்ட் கார்ட் எனப்படும் கடலோர காவற்படையில் பணி புரிய விரும்புகிறேன். என்ன பணி வாய்ப்புகள் உள்ளன? | Kalvimalar - News

கோஸ்ட் கார்ட் எனப்படும் கடலோர காவற்படையில் பணி புரிய விரும்புகிறேன். என்ன பணி வாய்ப்புகள் உள்ளன?மார்ச் 21,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

தேசிய அளவிலான துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படுவது கடலோர காவற்படை. நமது கடலோர பாதுகாப்பை உறுதி செய்வது இது தான். செயற்கைத் தீவுகளைப் பாதுகாப்பது, மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, எல்லைக்கு வெளியேயிருந்து தேசப் பாதுகாப்புக்கெதிரான அச்சுறுத்தல்களைத் தடுப்பது, கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பது போன்ற பணிகளை கடலோர காவற்படை தான் செய்கிறது.

இதில் நேவிக், எந்திரிக், அதிகாரி நிலையிலான பணியிடங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன. ஒருவரின் கல்வித் தகுதி, வயது போன்றவற்றைப் பொறுத்து இந்தப் பணிகளில் சேரலாம். அதிகாரி பணியிடங்கள் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் என அழைக்கப்படுகின்றன.

எந்திரிக் பணிகளுக்கு 17 முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு அல்லது இன்ஜினியரிங் டிப்ளமோ தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். நேவிக் பொதுப் பிரிவுப் பணிகளுக்கும் 17 முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். இப் பணிகளுக்கு +2 தகுதி. நேவிக் டொமஸ்டிக் பிரிவு பணிகளுக்கு 17 முதல் 22 வயதுக்குள் இருப்பதுடன் 10ம் வகுப்பு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இந்த 3 பணிகளுக்குமே குறைந்தது 157 செ.மீ., உயரம் இருப்பது முக்கியம். உயரத்திற்கேற்ற எடையைப் பெற்றிருக்க வேண்டும். சிறப்பான கண் பார்வையும் நல்ல உடற்தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

அசிஸ்டன்ட் கமாண்டன்ட் பொதுப் பிரிவுப் பணிகளுக்கு 21 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். கணிதம் மற்றும் இயற்பியலை பாடங்களாகக் கொண்ட பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். அசிஸ்டண்ட் கமாண்டன்ட் பைலட்/நேவிகேட்டர் பொதுப் பிரிவுப் பணிகளுக்கு 19 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். பி.எஸ்சி., இயற்பியல் அல்லது கணிதத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். உயரம் 162 செ.மீ., இருக்க வேண்டும். அசிஸ்டன்ட் கமாண்டன்ட் டெக்னிகல் பிரிவுப் பணிகளுக்கு இன்ஜினியரிங் பட்டப்படிப்பு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். உயரம் 157 செ.மீ., இருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு ஆண்டுக்கு 2 தடவை அறிவிப்பு வெளியிடப்படுகிறது. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். கடலோரக் காவற்படைப் பணி என்பது மிகச் சிறப்பான பணித் தன்மையையும் மனத் திருப்தியையும் தரவல்ல பணியாகும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us