கோவை: புதிய கல்வி திட்டத்தை பின்பற்றாத கல்வி நிறுவனங்கள், காலத்திற்கு ஏற்ற முன்னேற்றம் பெற இயலாது என பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., செயலர் மானிஷ் ஜோஷி பேசினார்.
கோவை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:
மாணவர்களை மையப்படுத்தி, புதிய கல்வி கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் - கல்வி நிலையங்கள் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். பட்டப்படிப்பு படிப்போர், ஓரிரு ஆண்டுகளில் படிப்பை முடித்துக் கொண்டால், அதற்கு ஏற்ப சான்றிதழ் கிடைக்கும்.
புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில், எவ்வித தடையும் இல்லை. காலத்துக்கு ஏற்ற கல்வி முறையை பின்பற்றுவோர், விரைவில் முன்னேற்றம் காண முடியும். பின்பற்றாவிட்டால், பின்தங்கிய நிலையில் தான் நீடிக்க முடியும்.
மாணவர்களின் எதிர்பார்ப்பை, புதிய கல்வி கொள்கை நிறைவேற்றும். தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் இருக்கும். நேரடி பயிற்சியும் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.