மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியின் 75வது ஆண்டு விழாவில் கல்லுாரி தலைவர் உமா கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ஹரி தியாகராஜன் வரவேற்றார். விழாவில் தியாகராஜர் காலேஜ் ஓபனிங் தி டோர்ஸ் டூ எஜூகேஷன் என்ற புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டார். டாபே நிறுவன தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன் பெற்றார்.
பின் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
தியாகராஜ செட்டியார் தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலை ஒரு நதிக்கரையில் இருப்பதைப் பார்த்து அதைப் போல மதுரையிலும் துவக்க கனவு கண்டார். அதன்படியே வைகை கரையில் இக்கல்லுாரியை துவக்கி வைத்துள்ளார். அவருக்கு அந்நாட்களில் உயர்கல்வி கிடைக்கவில்லை.
ஆனால் அவர் மதுரை இளைஞர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளார். இந்த கல்லுாரியின் விசிட்டர்ஸ் புத்தகத்தில் காமராஜர் போன்ற தலைவர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், நிபுணர்கள் கையெழுத்தே அதிகம் உள்ளது. இது இக்கல்லுாரிக்கு கிடைத்த பெருமையே. இவ்வாறு அவர் பேசினார்.
கல்லுாரி தலைவர் உமாகண்ணன் பேசுகையில், கல்லுாரியில் கல்வியை தாண்டி, மாணவர்கள் ஒழுக்க நெறி, திறன் மேம்பாடு உருவாக்குவதாக இருக்க வேண்டும். அந்த வகையில் கல்லுாரியை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்றார். நுாலாசிரியர் சந்தியா ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் முதல்வர் பாண்டியராஜ் நன்றி கூறினார்.