பெங்களூரு: நீதிபதி தேர்வை சொந்த ஊரில் எழுத, எட்டரை மாத கர்ப்பிணியாக இருக்கும் வக்கீலுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பத்து மாதங்கள் கஷ்டப்பட்டு வயிற்றில், ஒரு உயிரை சுமப்பதால், இந்தியாவில் கர்ப்பிணியருக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. கூட்டமான பஸ், ரயிலில் கர்ப்பிணியர் பயணம் செய்யும்போது, சக பயணியர் எழுந்து இடம் கொடுப்பர்.
தேர்வு எழுதும் கர்ப்பிணியருக்கு என்று பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும், நாம் கண்கூடாக பார்த்து இருக்கிறோம். இந்நிலையில் நீதிபதி தேர்வு எழுதும் கர்ப்பிணிக்கு சொந்த ஊரில் தேர்வு எழுத, கர்நாடகா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கர்நாடகாவில் காலியாக உள்ள 57 சிவில் நீதிபதிகள், பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறும் என்று, கடந்த மார்ச் 9ம் தேதி, கர்நாடகா உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தத் தேர்வை எழுத மாநிலம் முழுவதும் இருந்து 6,000க்கும் அதிகமான வக்கீல்கள் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஜூலை மாதம் நடந்த முதற்கட்ட தேர்வில் 1,022 வக்கீல்கள் வெற்றி பெற்றனர்.
ஒப்புதல்
வெற்றி பெற்ற 1,022 பேருக்கு நேற்றும், இன்றும் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு பெங்களூரில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முதற்கட்ட தேர்வில் தட்சிண கன்னடாவின் மங்களூரை சேர்ந்த வக்கீல் நேத்ராவதியும் ஒருவர். இவர் தற்போது, எட்டரை மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனால் பெங்களூருக்கு வந்து, தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் சொந்த ஊரில் தேர்வு எழுத அனுமதிக்கும்படி, சிவில் நீதிபதிகள் ஆட்சேர்ப்பு குழுவில் உள்ள நீதிபதிகள் தினேஷ்குமார், சோமசேகர், சுனில் தத் யாதவ், அசோக் கினகி, நாகபிரசன்னா ஆகியோர் அடங்கிய குழுவுக்கு, கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தை பரிசீலித்த நீதிபதிகள் குழு, சொந்த ஊரில் நேத்ராவதியை தேர்வு எழுத வைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து தலைமை நீதிபதி பிரசன்னா வரலே கவனத்திற்கும் கொண்டு சென்றனர். அவரும் சொந்த ஊரில் நேத்ராவதி தேர்வு எழுத ஒப்புதல் அளித்தார். தட்சிண கன்னடா மாவட்ட நீதிமன்றத்தில் நேத்ராவதி இன்று சிவில் நீதிபதி தேர்வு எழுதுகிறார். அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.
350 கிலோ மீட்டர் துாரம்
சொந்த ஊரில் தேர்வு எழுத அனுமதித்த நீதிபதிகள் குழுவுக்கு, நேத்ராவதிவும், அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்து உள்ளனர். மங்களூரு - பெங்களூரு இடைப்பட்ட துாரம் 350 கிலோ மீட்டர். பஸ், ரயிலில் சென்றால் 12 மணி நேரம் ஆகிறது. சொந்த ஊரில் தேர்வு எழுத, நீதிபதிகள் குழு ஒப்புதல் அளித்திருக்காவிட்டால், நேத்ராவதி கஷ்டப்பட்டு வந்திருக்க வேண்டும். மனித நேயத்துடன் முடிவு எடுத்த நீதிபதிகளை பாராட்டி, சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.