சென்னை: இந்திய தர நிர்ணய அமைப்புடன், நான்கு கல்வி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்திய தர நிர்ணய அமைப்பு, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பு. இது, பொருட்களுக்கான தர உரிமம், மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் கலைப் பொருட்களுக்கு ஹால்மார்க் உரிமம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாக வைத்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்திய தர நிர்ணய அமைப்பின் தென் மண்டல அலுவலகம், சென்னை தரமணியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்; ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி. வேல் டெக் மல்டி டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லுாரி, ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லுாரி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்திய தர நிர்ணய அமைப்பின், தேசிய மற்றும் சர்வதேச அளவில், தொழில்நுட்ப குழுக்கள் வழியே தரநிலைப்படுத்தல் நடவடிக்கையில் பங்கேற்றல்; தர நிலைப்படுத்தலுக்கு தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான, உள்கட்டமைப்பு ஆதரவை பெறுதல்.
மேலும், கூட்டாக கருத்தரங்குகள், மாநாடுகள் போன்றவற்றில் பங்கெடுத்தல்; கல்வி நிலையங்களில் தர நிர்ணயம் குறித்த தலைப்புகளில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றுக்கு, இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இந்நிகழ்ச்சியில், சென்னை பி.ஐ.எஸ்., அலுவலகத்தின் விஞ்ஞானி யு.எஸ்.பி.யாதவ், பவானி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.