சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மருத்துவக் கல்லுாரி மற்றும் கலை கல்லுாரிகள் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக, மேயர் பிரியா தெரிவித்தார். இவை, மாடம்பாக்கம் மற்றும் கொடுங்கையூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் அழகப்பா செட்டியார் என்பவர் 30.25 ஏக்கர் நிலத்தை, 1946ல் சென்னை மாநகராட்சிக்கு தானமாக வழங்கினார். அந்த இடத்தை, மருத்துவமனை கட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, தானப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு முன் வழங்கப்பட்ட நிலத்தை, 77 ஆண்டுகளாக பயன்படுத்தாமலும், உரிய வகையில் பராமரிக்காமலும் மாநகராட்சி இருந்து வருகிறது. அந்த இடத்தை உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் பலர் ஆக்கிரமித்து, ஒரு சென்ட் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.
அவ்வப்போது, ஆக்கிரமிப்புகளை சுட்டிக்காட்டி நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து அந்நிலத்தை, மாநகராட்சி பாதுகாத்து வருகிறது. அங்கு அமைக்கப்பட்ட தொழுநோய் மருத்துவமனையும் பயன்படுத்தப்பாடாமல் உள்ளது.
அந்த இடத்தில், சென்னை மாநகராட்சி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில், மும்பை மாநகராட்சியைபோல், சென்னை மாநகராட்சியும் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை துவக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, காலியாக உள்ள அந்நிலத்தில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான மருத்துவக் கல்லுாரியை அமைக்க, மாநகராட்சி முயற்சி எடுத்து வருகிறது.
இதுகுறித்து, மேயர் பிரியா கூறியதாவது:
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், மருத்துவக் கல்லுாரி அமைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதுகுறித்து, அமைச்சர்கள் மற்றும் துணை மேயரும் அறிவுறுத்தி உள்ளனர். அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல், கலைக் கல்லுாரியையும் மாநகராட்சி துவக்க திட்டமிட்டுள்ளது. கொடுங்கையூர் குப்பை கிடங்கு, 350 ஏக்கர் பரப்பில் உள்ளது. அதில், 280 ஏக்கர் பரப்பில், 64 லட்சம் கன மீட்டர் அளவில் குப்பை உள்ளது.
அந்த இடத்தை பயோமைனிங் முறையில், 648.38 கோடி ரூபாய் மதிப்பில் மீட்டெடுக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அவை மீட்டெடுக்கப்பட்டால், அங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, துணை மேயர் மகேஷ்குமார் கூறியதாவது:
மாடம்பாக்கத்தில் உள்ள நிலத்தில் மருத்துவக் கல்லுாரி, கொடுங்கையூரில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி திட்டமிடப்பட்டு வருகிறது. அவ்வாறு மருத்துவம் மற்றும் கலைக் கல்லுாரிகள் அமைக்கப்பட்டால், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மாநகராட்சி பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
மருத்துவம் மற்றும் கலைக் கல்லுாரி அமைக்கப்பட்டால், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதற்கு, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி, அதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.