கோவை: தனியார் சுயநிதி கல்லுாரிகளில், பேராசிரியர் பணியை உருவாக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தனியார் சுயநிதி மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் சார்பில், பாரதியார் பல்கலை பதிவாளர்(பொறுப்பு) முருகவேலிடம், கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
மனுவில் கூறியிருப்பதாவது:
பல்கலை விதிமுறைகளின்படி, கற்பித்தல் பணியில் ஈடுபட, பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களை நியமிக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
உரிய தகுதிகள் கொண்ட உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர் பதவியை பெறவும், இணை பேராசிரியர்கள், பேராசிரியர் பதவி பெறவும் உரிமை உண்டு. அரசின் விதிமுறைகளின் படி, பணியில் சேர்ந்தது முதல், குறைந்தபட்சம் இரண்டு பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், தனியார் சுயநிதி கல்லுாரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றமும் 2020 ஜன., மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. தனியார் சுயநிதி கல்லுாரிகளில் பேராசிரியர் பணியை உருவாக்குவதால், அரசுக்கோ, பல்கலைக்கோ எவ்வித பொருளாதார சுமையும் ஏற்படப்போவதில்லை. ஆகவே, நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று, பல்கலை நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், துணைவேந்தர் பொறுப்பு குழுவில் புதிதாக இடம் பெற்றுள்ள, ஏ.ஜே.கே., கல்லுாரி செயலாளர் அஜீத்குமார் லால் மோகன், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.