பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள, ஆதித்யா - எல் 1 விண்கலம், 9.2 லட்சம் கி.மீ., பயணம் செய்த நிலையில், புவி மண்டலத்தில் இருந்து விலகி, சூரியனை நோக்கி பயணத்தை தொடர்கிறது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா - எல் 1 விண்கலம், கடந்த மாதம் 2ம் தேதி செலுத்தப்பட்டது. இது, பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., தொலைவில், சூரியனை சுற்றியுள்ள லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 எனப்படும் சூரிய சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
அங்கிருந்து இது சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இத்தனை நாட்களாக, 9.2 லட்சம் கி.மீ., பயணம் செய்து, பூமியின் சுற்று வட்டப் பாதையை சுற்றி வந்த விண்கலம், நேற்று பூமியின் மண்டலத்தில் இருந்து விலகியுள்ளது. தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்காக, எல் 1 பகுதியை நோக்கி பயணத்தை தொடர்கிறது. இதற்கு முன் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம், முதல் முறையாக பூமியின் மண்டலத்தில் இருந்து விலகிச் சென்றது.
தற்போது இரண்டாவது முறையாக, விண்கலத்தை பூமியின் மண்டலத்தில் இருந்து விலகும் முயற்சியை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.