சென்னை: திருக்குறளை கற்க, அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க காந்தியடிகள் விரும்பினார் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசினார்.
ராமலிங்கர் பணிமன்றம் மற்றும்- ஏ.வி.எம்., அறக்கட்டளை சார்பில், அருட்பிரகாச வள்ளலார், காந்தியடிகளின் 56வது ஆண்டு விழா, சென்னையில் நேற்று துவங்கியது.
நிகழ்ச்சியில், ராமலிங்கர் பணிமன்றத் தலைவர் ம.மாணிக்கம் பேசியதாவது:
மக்களின் நல்வாழ்வுக்காக, வள்ளலார் - காந்தியடிகள் விழாவை, 55 ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில், தமிழ் வளர்ச்சிக்காகவும் பணி செய்ய வேண்டும் என, விரும்பினோம். அதற்காக, மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தை துவக்கினோம். இதுவரை, 40 நுால்களை மொழிபெயர்த்துள்ளோம். இந்தாண்டு முதல் மொழிபெயர்ப்பு விருதுகளையும் வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவை துவக்கி வைத்த நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது:
வள்ளலார், 9 வயது முதல் ஆன்மிக உரை நிகழ்த்தினார். அவர், சைவ நெறியாளர். அவரின் அருட்பா பாடல்கள், அதை மெய்ப்பிக்கும். அவர், அறநெறியை இறைநெறியின் வாயிலாக வலியுறுத்த, தன் இறுதி காலத்தில் சன்மார்க்கத்தை வலியுறுத்தினார்.
கொல்லாமை, புலால் உண்ணாமை, மது அருந்தாமை எனும் கொள்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் வாழ்ந்தார். அதே கொள்கைகளை தன் வாழ்வில் கடைப்பிடித்தவர்கள் வள்ளலாரும், காந்தியடிகளும்.
காந்தி, தென் ஆப்ரிக்காவில் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பத்திரிகை நடத்தினார். ஆனாலும், திருக்குறள் கருத்துக்களை முழுமையாக விளங்கிக்கொள்ள அவரால் முடியவில்லை. அதனால், அடுத்த பிறவியிலாவது தமிழனாக பிறந்தோ அல்லது முழுமையாக தமிழ் கற்றோ, திருக்குறளை முழுதும் அறிய வேண்டும் என பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், அமுதசுரபி இதழாசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், சிவசக்தி வடிவேல், சற்குருநாத ஓதுவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.