புதுடில்லி: நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், அவசர சிகிச்சை துறைகளில் போதிய அளவில் பேராசிரியர்கள் இல்லை. போலி பெயர்களில் மோசடி நடந்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் கிடைப்பதில்லை என, தேசிய மருத்துவ கமிஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேசிய மருத்துவ கமிஷன் சார்பில், 2022 - 2023ம் ஆண்டுக்கு கல்லுாரிகள் செயல்படுவதற்கான ஒப்புதல் அளிப்பது தொடர்பாக சமீபத்தில் வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்பட்டன. இதில் புதிய மருத்துவக் கல்லுாரி துவங்கும்போது அதில் இருக்க வேண்டிய துறைகளில் அவசர சிகிச்சை துறை நீக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம்
இது குறித்து, இந்திய அவசர சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்து, தேசிய மருத்துவ கமிஷனின் இளநிலை மருத்துவ கல்வி வாரியம் அனுப்பியுள்ள பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது:
புதிய மருத்துவக் கல்லுாரிகள் துவங்கும்போது, அதில் இருக்க வேண்டிய துறைகள் குறித்த வரைவு, ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதில், அவசர சிகிச்சை உட்பட, 14 துறைகள் இடம்பெற்றிருந்தன. இந்த துறைகளில் இளநிலை மருத்துவ மாணவர்களை சேர்க்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுதும், 27 மாநிலங்களில் உள்ள, 246 இளநிலை மருத்துவக் கல்லுாரிகளுக்கு, 2022 - 2023 கல்வியாண்டில் அங்கீகாரம் அளிப்பது அல்லது நீட்டிப்பது குறித்து ஆராயப்பட்டது.
இதில் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. பெரும்பாலான கல்லுாரிகளில், அவசர சிகிச்சை துறையில் பேராசிரியர்களே இல்லை. போலியான பெயர்களில் சிலருடைய பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இருக்கும் பேராசிரியர்களும், உள்ளுறை டாக்டர்களும், அவசர சிகிச்சை துறைக்கு செல்வதில்லை.
அவசர சிகிச்சை
ஆவணங்களின்படி, 134 மருத்துவக் கல்லுாரிகளில், அவசர மருத்துவத் துறை என்று ஒன்று உள்ளது. ஆனால், ஆவணங்களுக்கும், உண்மை நிலவரங்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இது குறித்து எச்சரிக்கப்பட்டும், பேராசிரியர்களின் வருகைப் பதிவேடு அதிகரிக்கவில்லை. பல கல்லுாரிகளில் பேராசிரியர்கள், இந்த துறைக்கே செல்வதில்லை. அவசர சிகிச்சை துறை உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை, 45ல் இருந்து, 134 ஆக உயர்த்தப்பட்டது. மேலும், இதில் படிப்பதற்கான இடங்கள், 120ல் இருந்து, 462 ஆக உயர்த்தப்பட்டன.
அவசர சிகிச்சை துறையில் பணியாற்ற வேண்டிய டாக்டர்கள் மற்றும் பேராசிரியர்கள் வருகைபதிவேடு, ஆதார் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி நடத்திய சோதனையில், 50 சதவீதம் அளவுக்கு கூட, உள்ளுறை டாக்டர்கள், பேராசிரியர்கள் அவசர சிகிச்சை துறைக்கு செல்வதில்லை. தங்களுக்கு கற்றுத் தருவதற்கு யாரும் இல்லாததால், மாணவர்களும் அவசர சிகிச்சை துறைகளுக்கு செல்வதில்லை. அந்த வகுப்பை ஓய்வு நேரமாகவே மாணவர்கள் பார்க்கின்றனர். இதனால், மருத்துவக் கல்லுாரிகள் துவங்குவதற்கு தேவையான துறைகளில் இருந்து, அவசர சிகிச்சை நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.