சென்னை: இன்ஜினியரிங்கில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் கணினி படிப்பை கட்டாயமாக்க அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
சர்வதேச அளவில் கணினியின் பயன்பாடு மற்றும் அவை சார்ந்த படிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதன்படி இன்ஜினியரிங் மற்றும் அறிவியல் படிப்புகளி்ல் கணினி வகை படிப்புகள் தனியாக நடத்தப்படுகின்றன. கணினி அறிவியல் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பம் டேட்டா சயின்ஸ் மெஷின் லேர்னிங் என பல படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளை தவிர இன்ஜினியரிங் மெக்கானிக்கல் சிவில் எலக்ட்ரிக்கல் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் அச்சு தொழில்நுட்பம் சுரங்கவியல் புவி அமைப்பியல் என பிரிவுகள் உள்ளன. இவற்றில் கணினி சார்ந்த பாடங்கள் கிடையாது.
இந்நிலையில் சமீபகாலமாக அனைத்து துறைகளின் செயல்பாடுகளிலும் கணினி சார்ந்த பயன்பாடுகள் அதிகரித்துள்ளதால் இன்ஜினியரிங்கில் கணினி சார்ந்த ஒரு பாடத்தை அனைத்து பிரிவுக்கும் கட்டாயமாக்க அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் இந்த மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.