சென்னை: ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியிடப்படுகிறது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெற்ற ஜூன்/ஜூலை 2023 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதிய முதலாமாண்டு/ இரண்டாமாண்டு ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும் தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் வரும் 27ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேற்படி மாணவ, மாணவிகள் தங்களது விடைத் தாள்களை, மறுகூட்டல்-I செய்யவும், ஒளிநகல் (ஸ்கேன்) பெறவும் விண்ணப்பிக்க விரும்பினால் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.,3 முதல் அக்.,5ம் தேதி வரை அன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள்களின் ஒளிநகல் வேண்டி விண்ணப்பித்த தேர்வர்கள் மட்டுமே மறுகூட்டல்- II மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாள் ஒளிநகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.275/- கட்டணமாகவும், விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.205/- கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.