மைசூரு: தசரா ஊர்வலத்தில் பங்கேற்க வந்திருக்கும் யானைகளின் பாகன்களின் பிள்ளைகள் கல்வி கற்க, மைசூரு அரண்மனை வளாகத்தில் தற்காலிக பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆசிரியை உட்பட நான்கு ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மைசூரு தசரா அடுத்த மாதம் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்க உள்ளது. தசராவின் சிகர நிகழ்ச்சியாக நடக்கும், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க14 யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தங்க அம்பாரி சுமக்கும் அபிமன்யு உட்பட 9 யானைகள், கடந்த 1ம் தேதி மைசூரு அழைத்து வரப்பட்டு, அரண்மனை வளாகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
யானைகளுடன் பாகன்களும், அவர்களின் குடும்பத்தினரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் பாகன்களின் பிள்ளைகளின் கல்விக்கு, இடையூறு ஏற்படாத வகையில், மைசூரு அரண்மனை வளாகத்தில், நேற்று முன்தினம் தற்காலிக பள்ளி திறக்கப்பட்டுள்ளது. மைசூரு கூர்ஹள்ளி அரசு பள்ளி ஆசிரியைகள் சுப்புலட்சுமி, திவ்யா, பாத்திமா, மோசின்தாஜ் ஆகியோர், தற்காலிக பள்ளி ஆசிரியைகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சுப்புலட்சுமி, தமிழர். பாகன்கள் பிள்ளைகளுக்காக அமைக்கப்படும் தற்காலிக பள்ளியில், 19 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி உள்ளதாக, சுப்புலட்சுமி பெருமையுடன் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும், தற்காலிக பள்ளியில் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.