புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரியில் 131 இடங்களும், மூன்று தனியார் கல்லுாரிகளில் 239 இடங்கள் என மொத்தம் 370 எம்.பி.பி.எஸ்.,சீட்டுகள் இந்தாண்டு அரசு ஒதுக்கீடாக நிரப்பப்பட உள்ளது.
அதில், 10 சதவீத உள் ஒதுக்கீடாக 37 சீட்டுகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் முறையாக இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 20 பேர் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சியுடன் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு சென்டாக் முதற்கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் ரங்கசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கூறுகையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தற்போது 10 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தியுள்ளோம்.
இதன் மூலம் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும் தற்போதுள்ள கல்வி கட்டணத்தை அரசு பள்ளி மாணவர்கள்செலுத்த முடியாமல் கஷ்டப்படுவது குறித்து என்னிடம் தெரிவித்தனர்.
எனவே அரசு பள்ளி மாணவர்கள் தடையின்றி மருத்துவ படிப்பை பயிலும் வகையில், அவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்கும். அவர்களிடம் கல்வி கட்டணத்தை கேட்க கூடாது என்று கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு, உள் ஒதுக்கீட்டில் சீட் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர் பெற்றோர் அமைப்பினர் பாராட்டி வரவேற்றுள்ளனர்.
எவ்வளவு கட்டணம்
பல் மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தியுள்ள போதிலும், எம்.பி.பி.எஸ்.,படிப்பில் தான் கட்டணம் அதிகம். அரசு மருத்துவ கல்லுாரியில் 1,43,700 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தனியார் மருத்துவ கல்லுாரிகளில் பிம்ஸ் மற்றும் மணக்குள விநாயகர் கல்லுாரிகளில் -ரூ.3.80 லட்சம், வெங்கடேஸ்வரா-ரூ.3.29 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த கண்ணீர்
அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்ததும், சீட் கிடத்த அரசு பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோரும் சட்டசபைக்கு வந்து முதல்வரை சந்தித்து ஆனந்த கண்ணீர் விட்டு காலில் விழுந்தனர். உணர்ச்சிபூர்வமாக இருந்த முதல்வர், நன்றாக படித்து வாழ்வில் உயர வேண்டும் என வாழ்த்தினார்.