புதுடில்லி: நம் நாட்டில் மருத்துவ கல்வி பயின்ற மாணவர்கள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்கவும், பணியாற்றவும் இனி மருத்துவக் கல்விக்கான சர்வதேச கூட்டமைப்பின் அங்கீகாரத்தை தனியாகப் பெறத் தேவையில்லை.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நம் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்தவர்கள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்கவோ, பணியாற்றவோ, மருத்துவ கல்விக்கான சர்வதேச கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம்.
இந்த சர்வதேச கூட்டமைப்பின் அங்கீகாரம், நம் நாட்டின் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு, 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நம் நாட்டில் உள்ள 706 மருத்துவக் கல்லுாரிகள் மருத்துவக் கல்விக்கான சர்வதேச கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களாக தரம் உயர்கின்றன.
அடுத்த, 10 ஆண்டுகளுக்குள் துவங்கப்படும் புதிய மருத்துவக் கல்லுாரி களுக்கும் இந்த அங்கீகாரம் கிடைக்கும். இதன் வாயிலாக, சர்வதேச மாணவர்கள் தரமான மருத்துவக் கல்வி பயில நம் நாட்டுக்கு வருகை தருவது அதிகரிக்கும். அதோடு, நம் நாட்டின் மருத்துவக் கல்வியின் தரத்தை தேசிய மருத்துவ ஆணையம் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தும்.
நம் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்தவர்கள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் முதுநிலை மருத்துவப்படிப்பு பயில அல்லது பணியாற்ற தனியான அங்கீகாரத்துக்கு அந்நாட்டில் விண்ணப்பிக்க தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.