சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளில் அனைத்து மாணவரும் சேரும் வகையில், நீட்தேர்வு சேர்க்கை மதிப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக, டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, 200 வினாக்களுடன் 800 மதிப்பெண்ணுக்கு, நீட் தகுதி தேர்வு நடத்தப்படும். அத்தேர்வில் சரியான விடைக்கு நான்கு மதிப்பெண்; தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் மைனஸ் ஆகும்.
மேலும், நீட் தேர்வில் ஒரு மாணவர் எடுத்த மதிப்பெண்ணை, தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் எடுத்த மதிப்பெண்ணுடன் வகுத்து, அதை 100ல் பெருக்கி, பர்சன்டைல் என்ற சேர்க்கை மதிப்பு விகிதம் அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில், பொது பிரிவினருக்கு, 50 சேர்க்கை மதிப்பு விகிதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 45; பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிவிராடர், பழங்குடியினத்தவருக்கு 40 சேர்க்கை மதிப்பு விகிதம் அடிப்படையில், மத்திய மருத்துவ கவுன்சில் கமிட்டி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கு இரண்டு கட்ட மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், மொத்தமுள்ள, 45,000க்கும் மேற்பட்ட இடங்களில், 10,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளில், அதிக இடங்கள் காலியாக உள்ளன.
இவற்றை நிரப்புவதற்காக, சேர்க்கை மருத்துவ விகிதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு எழுதி, மைனஸ் 40 மதிப்பெண் எடுத்தவர்களும், பதிவு செய்து மாணவர் சேர்க்கையில் விண்ணப்பிக்க முடியும்.
மருத்துவ கவுன்சில் கமிட்டியின், இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதன்படி, முதுநிலை மருத்துவம் படிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு, வாய்ப்பு அளிக்கும் வகையில், சேர்க்கை மதிப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பு டாக்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம், தனியார் கல்லுாரிக்கு சாதகமாக, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜெயலால் கூறியதாவது:
அகில இந்திய முதுநிலை மருத்துவ படிப்பில் இரண்டு கட்ட கவுன்சிலிங் தான் முடிந்துள்ளது. மேலும், இரண்டு கட்ட கவுன்சிலிங் நடத்த வேண்டியுள்ளது. தற்போது, ஐந்து அல்லது 10 சேர்க்கை மதிப்பு விகிதத்தை குறைத்திருக்கலாம். அதை தவிர்த்து, சேர்க்கை மதிப்பு விகிதத்தை முற்றிலும் ரத்து செய்தது, தரமான டாக்டர்களை உருவாக்க உதவாது.
இவ்வாறு கூறினார்.