சென்னை: ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஒரே வினாத்தாள் அடிப்படையில் காலாண்டு தேர்வை நடத்தி, பள்ளிக் கல்வித் துறை சோதனை செய்துள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவியருக்கு, இம்மாதம் 15ம் தேதி காலாண்டு தேர்வு துவங்கியது. இதில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, 19ம் தேதி காலாண்டு தேர்வு துவங்கியது. இதிலும், ஒரே விதமான வினாத்தாள் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களில், மூன்றாம் வகுப்பு வரை செயலி வழியாகவும்; நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு எழுத்து தேர்வாகவும், 20ம் தேதி காலாண்டு தேர்வு துவங்கின.
இந்த தேர்விலும், மாநிலம் முழுதும் ஒரே வினாத்தாள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனை முயற்சி, எந்த சர்ச்சையும் ஏற்படாமல் முடிந்துள்ளதால், வரும் காலங்களில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பொது தேர்வு போன்று, ஒரே வினாத்தாளில் அடிப்படையில் தேர்வு நடத்தலாம் என, பள்ளிக் கல்வி துறை முடிவு செய்துள்ளது.