சென்னை: நீட் தேர்வில் பலன் பூஜ்ஜியம் தான் என்பதை, மத்திய பா.ஜ., அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் தன் எக்ஸ் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
முதுநிலை மருத்துவ படிப்புக்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் என்று வரையறுப்பதன் வழியாக, நீட் என்றால், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பதில் தகுதிக்கு பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டனர். பயிற்சி மையங்களில் சேருங்கள்; நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது. நீட் பூஜ்ஜியம் என்றாகி விட்டது. இதைத் தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாக சொல்லி வந்தோம். நீட் என்ற பலி பீடத்தை வைத்து, உயிர்களை பறிக்கும் பா.ஜ., ஆட்சியை அகற்றியாக வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி:
முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 8,000க்கும் அதிகமான முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள் நிரம்பாமல் போகும் என்பதால், மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது. இது சிறிதும் ஏற்க முடியாத வாதம்.
காலியாக இருக்கும் இடங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ளன. அவற்றின் வருமானம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சமூக அநீதி. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும், நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை. எனவே, நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதி இருந்தால் மட்டும் போதும், மதிப்பெண் ஒரு பொருட்டல்ல என, மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. இதிலிருந்தே நீட் என்பது ஒரு மோசடியான தகுதி தேர்வு என்பது தெரிகிறது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதை நிறுத்த வேண்டும்.