பெங்களூரு: நிலவில் பகல் பொழுது இன்று துவங்கியுள்ள நிலையில், அங்கு, ஸ்லீப்பர் மோட் எனப்படும் உறக்கநிலையில் உள்ள, சந்திரயான் - 3 லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் - 3 விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஜூலை 14ல் செலுத்தியது.
இதன் விக்ரம் லேண்டர் ஆக., 23, மாலை 6:04 மணியளவில், திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் வாயிலாக, நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதையடுத்து, தரையிறங்கிய இடத்தில் இருந்து விக்ரம் லேண்டரும், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்ற பிரஜ்ஞான் ரோவரும் ஆய்வுகள் மேற்கொண்டன.
இது தொடர்பான புகைப்படங்கள் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நிலவில் பகல்பொழுது முடிந்ததை அடுத்து, கடந்த 2 மற்றும் 4ம் தேதிகளில் ரோவரும், லேண்டரும் ஸ்லீப்பர் மோடில் வைக்கப்பட்டன.
இச்சூழலில், நிலவில் பகல் பொழுது இன்று மீண்டும் துவங்குகிறது. இதனால், சூரிய ஒளியில் இயங்கும் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை, மின்சக்தியை உற்பத்தி செய்து மீண்டும் விழித்தெழ வாய்ப்புள்ளதால், தீவிர கண்காணிப்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
நிலவின் தென் துருவ பகுதியில் இரவு நேரத்தில் மைனஸ், 200 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு அதீத குளிர் நிலவும். இதைத் தாங்கும் வகையில் லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைக்கப்படவில்லை.
அதேநேரத்தில், இதன் ரிசீவர்கள் மட்டும் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பாதுகாப்பாக இருந்தால், லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைப்பது சாத்தியமாகும் எனக் கூறியுள்ள விஞ்ஞானிகள், இந்த சவாலான பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் நம்பிக்கை!
லோக்சபாவில் சந்திரயான் - 3 திட்டம் தொடர்பாக விரிவான விவாதம் நடந்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் காரசாரமாக விவாதித்தனர்.
இதில் பேசிய போது மத்திய விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
நிலவில் உள்ள விக்ரம் லேண்டர், பிரஜ்ஞான் ரோவர் ஆகியவற்றை விழித்தெழ வைக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் தீவிர முயற்சியால், விடியலின்போது அவையிரண்டும் துாக்கத்தில் இருந்து விழித்திருக்கும் என நம்புகிறேன். இந்த செய்திக்காக காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.