பெங்களூரு: பெங்களூரில் அதிகரிக்கும், போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, அனைத்து பள்ளிகளின் நேரத்தை மாற்ற கல்வித்துறை ஆலோசிக்கிறது. இது குறித்து கூட்டம் நடத்த உள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதற்கு தீர்வு காண, நகரின் அனைத்து பள்ளிகள், தொழிற்சாலைகள் நேரத்தை மாற்றும்படி, கர்நாடக உயர் நீதிமன்றம் ஆலோசனை கூறியது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தீவிரமாக கருதிய, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மதுபங்காரப்பா, சமீபத்தில் துறை அதிகாரிகள், தனியார் பள்ளிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரில் தற்போது, பள்ளிகள் காலையில் 8:45, 9:00 மணிக்கு ஆரம்பமாகிறது. மாலையில்3:00, 4:00 மணிக்கு முடிகிறது. ஒரு மணிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ, பள்ளிகளை துவக்க அரசு ஆலோசிக்கிறது. இதற்கு, பெற்றோரும், தனியார் பள்ளி நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் உறக்கத்தில் இருந்து, விரைவில் எழ வேண்டியுள்ளது. தாய், தந்தை இருவரும் பணிக்கு செல்பவராக இருந்தால், பிள்ளைகளை பள்ளிக்கு தயாராக்குவது கஷ்டமாக இருக்கும். அவர்களின் விளையாட்டு நேரம் குறையும். உறங்கும் நேரமும் மாறும். இது, பிள்ளைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என பெற்றோர் அஞ்சுகின்றனர்.